19 செப்டம்பர் 2011

கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்கக்கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது.
இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என அரச தரப்பு கூறியதை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட கூட்டமைப்பு புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திரிகளால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை எந்தவித தயக்கமும் இன்றி குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்(தங்களை புத்திஜிவிகள் என நினைக்கின்ற) ஏற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக நேற்றைய வீரகேசரி இப்படியான பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளாது ஒரு இறுதித் தீர்வை முன்வைத்தே பேச வேண்டும் என புத்திஜீவிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வேண்டிக் கொள்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச் செய்தி சம்பந்தமாக அரசாங்கப் பத்திரிகையான தினகரன் இன்று வெளியிட்ட செய்தியில் ‘பேச்சுவார்த்தைப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சுமந்திரன் புத்திஜீவிகள் என்றால் யார் என்று அந்தப் பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யார் அந்தப் புத்திஜீவிகள் எனத் தெரியாதவிடத்து அதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்’.
பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கிகாரத்திற்காக தெரிவிக்குழுவிற்கு முன்வைப்பதை விட கூட்டமைப்பு புத்திஜீவிகள் தெரிவுக் குழுவுடனே பேச்சுவார்த்தை நடாத்துவது சிறந்தது என்கிறார் கொழும்பின் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக