07 செப்டம்பர் 2011

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு,ஒன்பது பேர் பலி!

டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் ப்ரீப்கேஸில் வைக்கப்பட்ட பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் பலியானதாக உள்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
5வது வாசலில்:
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். பின்னர் வக்கீல்களே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
'ப்ரீப்கேஸ்' குண்டு:
முதலில் இந்தக் குண்டுவெடிப்பு சாதாரணமானதாக கருதப்பட்டது. ஆனால் போலீஸ் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் இது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்பது தெரிய வந்தது.
ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்டோர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை:
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் டெல்லி காவல்துறையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறை ஆணையருடன் தொடர்ந்து விவரம் கேட்டு வருகின்றனர்.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சிறப்பு செயலாளர் யு. கே. பன்சால் கூறியதாவது,
டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் ஒரு ப்ரீப்கேஸ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நீதிமன்றத்திற்குள் செல்வதற்காக நுழைவுச் சீட்டு வாங்க சுமார் 200 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தான் அந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
குண்டுவெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிற்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்த இடத்தில்
அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
2-வது சம்பவம்:
கடந்த மே மாதம் 25ம் தேதியும் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்தது நினைவிருக்கலாம்.
குண்டுவெடிப்பு எதிரொலி-ராஜ்யசபா ஒத்திவைப்பு:
இந்த நிலையில் குண்டுவெடிப்பு குறித்து ராஜ்யசபாவில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்யசபா கூடியதும் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில் டெல்லி உயர்நீமன்றம் அருகே இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில் சிலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மேல் விவரங்கள் கிடைத்ததும் அதை அரசு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும். பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக