23 செப்டம்பர் 2011

உயிருடன் உள்ளவரை இறந்ததாக கூறி ஒப்படைத்த மருத்துவர்கள்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தமிழகத்தில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்த இலங்கை அகதியின் தலைவிதியைத் தமிழக வைத்தியர்களும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, திருச்சி தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர் உயிர் பிழைத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி (வயது 64) .இவரது மனைவி கோமதி (வயது 56). இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து 1985-ம் ஆண்டு மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள் 1996-ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்ரராக பணிபுரியும் இவர்களது மகன் மோகன்தாஸ் 15 ஆம் திகதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை 3 நாட்கள் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ் அம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை கால்கள் அசையவே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீண்டும் தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாக தரப்பு கூறியதாவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்ட்ட மோகன்தாஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டி லேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார்.
3 நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால் இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கின்றீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிகிச்சை செய்கிறோம் என அவரது உறவினர்கள் தகராறு செய்தனர்.
அதனால் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ் என மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையயழுத்து வாங்கி உயிருடன் தான் கொடுத்தோம். தற்போது திருச்சி அரசு மருத்துமனையில் அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ் உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு நிர்வாக தரப்பில் கூறப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக