06 செப்டம்பர் 2011

ஜெகத் டயஸ் போர்க் குற்றவாளி"மீண்டும் எழுகிறது அழுத்தம்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது – European Centre for Constutitional and Human Rights (ECCHR) – ஐரோப்பிய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் போர்மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையினை இந்த அமைப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா படைத்துறையின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மன் நாட்டிற்கான சிறிலங்காவின் துணைத் தூதுவராக பதவியில் உள்ளார்.
’2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் 57வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸினால் மேற்கொள்ளப்பட்ட போர்மீறல் குற்றச்சாட்டுகள்’ எனத் தலைப்பிடப்பட்ட 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஜெகத் டயஸிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விபரிக்கப்பட்டுள்ளதோடு, 57வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட போர்மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நேரடிச் சாட்சியங்களும் இவ்வறிக்கையில் பதிவாகியுள்ளன.
சுவிஸ் நாட்டில் ஜெகத் டயஸிற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுத்துள்ள Track Impunity Always எனும் மனித உரிமைக் குழுவின் இணைப்பாளர் Philip Grant கூறும் போது, பல்வேறு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையத்தினதும் ஐ.நா நிபுணர் குழுவினதும் அறிக்கைகளும் அவற்றில் உள்ளடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
டயஸ் தலைமையிலான படையினர் போர்க்குற்றங்களாக வரையறுக்கத்தக்க பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமைக்கான நம்பகமான ஆதாரங்கள் இவை என அவர் கூறியுள்ளார்.
டயஸ் மீதான குற்றச்சாட்டுகள் சுவிஸ் நீதித் துறையினால் விசாரிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள Philip Grant இந்த மோசமான குற்றச்சாட்டுகள் காரணமாக, இராஜதந்திர வாய்ப்புகள் டயஸிற்கு வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போர் தொடர்பான மேலோட்டமான அறிமுகத்துடனும், பொது மக்களின் அவலங்கள் ‘ஏற்றுக் கொள்ள முடியாத பேரிழப்பு’ என 2009 ஜுன் 1ஆம் திகதி ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வெளியிட்ட கூற்றையும் மேற்கோள் காட்டியவாறு இவ்வறிக்கை தொடங்குகின்றது.
தொடர்ந்து வீக்கிலீக்ஸ் தகவற் கசிவினை ஆதாரமாகக் கொண்ட 2010 ஜனவரி 15 அமெரிக்க தூதுவர் Patricia Butenis அனுப்பிய அறிக்கையில், போர்மீறல்களுக்கு பொறுப்பானவர்களாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர்கள் உட்பட மற்றும் முன்னாள் படைத்துறைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட இராணுவத் தலைமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பல மூத்த படைத்துறைத் தளபதிகளை அனைத்துலக நாடுகளில் தனது இராஜதந்திர பிரதிநிதிகளாக அனுப்பி வைத்துள்ளது என்பது தொடர்பாக இவ்வறிக்கையில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஜேர்மன், சுவிஸ் மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகளில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெகத் டயஸ் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது. ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறியுள்ளதாக ஜேர்மன் நாட்டின் மீது அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாறாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு புதுப்பித்தல் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஜேர்மனிலுள்ள சிறிலங்கா தூதரகத்தை நாடும் தமிழர்களை ‘அச்சுறுத்தவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மன் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டவராக மட்டும் விளங்கவில்லை. அவர்களுடைய பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியிலுள்ள தமிழ்ச் சமூகத்தைக் கண்காணிக்கவும் விசாரணைகளுக்கு உட்படுத்தவும் ஜேர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினரால் ஜெகத் டயஸ் கையாளப்படுகின்றார். சுவிஸ் நாட்டிலும் இதே வகை நடிவடிக்கைகள் இடம்பெறுகின்றவை தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போர்மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவங்களையும் கவனமாக ஆராய்ந்து, அதை தொடர்பான நம்பகமான ஆதாரங்களுடன் அவை அறிக்கையிடப்பட்டுள்ளன என ECCHR தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான சம்பவங்கள் மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக முரண்பாட்டுக் குழு, பி.பி.சி உட்பட்ட காத்திரமான நம்பகமான மூலத்தகவல்களிலிருந்து விபரிக்கப்பட்டுள்ளன. போர்மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை நேரடிச் சாட்சியங்கள் மூலமும் ECCHR பெற்றுக் கொண்டுள்ளது எனவும் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக