14 செப்டம்பர் 2011

மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு மனோகணேசன் கண்டனம்!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோயில் வளாகத்திற்குள் அடியாட்களுடன் அத்துமீறி நுழைந்து, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மிருகவதையை தடுப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசியல்வாதி, தமிழ் இந்துக்களின் மனங்களை வதை செய்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
முன்னேஸ்வரம் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது இந்து தர்மத்திற்கு முரணானது. மிருகவதையை ஒருபோதுமே இந்து பாரம்பரியம் ஏற்றுக்கொள்வதில்லை.
உலகெங்கும் பல்வேறு மதஸ்தலங்களிலே பகுத்தறிவிற்கு ஒவ்வாத எத்தனையோ காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்விதம் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ஒரு செயற்பாட்டை தடாலடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. முன்னேஸ்வரம் தொடர்பிலே ஏற்கனவே நீதிமன்றத்தின் தலையீடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அகில இலங்கை இந்து மாமன்றம் உட்பட பல்வேறு இந்து மத அமைப்புகளும் இதுதொடர்பிலே அக்கறை கொண்டுள்ளன. அது தவிரவும், அரசாங்கத்திற்குள்ளே பல்வேறு தமிழ் இந்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இந்து அமைப்புகளின் துணையை பெற்றுக்கொள்ளாமலும், குறைந்தப்பட்சமாக அரசாங்கத்தில் இருக்கக்கூடிய இந்து அரசியல்வாதிகளை துணைக்கு அழைத்துகொள்ளாமலும் மேர்வின் சில்வா தனது அடியாட்களுடன் ஆலயத்திற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார். அங்கு குழுமியிருந்த பக்தர்களையும், அந்த ஆலய குருமார்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்து உணர்வாளர்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளார்.
இத்தகைய மிருகவதையை தடாலடியாக தடுக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள் வாழ்கின்ற இந்நாட்டிலேதான், இலட்சக்கணக்கான மக்கள் சில நாட்களுக்குள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நினைத்து பார்க்கவேண்டும். இன்று மிருகவதையை எதிர்கின்றவர்கள், மனித படுகொலைகளை எதிர்காதது மாத்திரம் அல்ல, அவற்றை நியாயப்படுத்தியவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதைப்போல், இந்து ஆலய வளாகத்திற்குள் நுழைந்து மேர்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் முறைதவறி நடந்துகொண்டுள்ளார்கள். ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது வேறு, மத வழிபாட்டு ஸ்தலம் என்பது வேறு என்பதை மேர்வின் சில்வாவிற்கு அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளாவது எடுத்துக்கூறவேண்டும்.
பௌத்த விகாரைகளுக்குள்ளே எத்தனையோ முறைதவறான செயல்கள் நடைபெறுவதாக தினந்தோறும் செய்திகள் வருகின்றன. இவற்றை எதிர்த்து பௌத்த சிங்களவர்கள் அல்லாத நாங்கள், எங்களது ஆதரவாளர்களுடன் விகாரைகளுக்குள் நுழைந்து சட்டத்தை நிலைநாட்ட முடியுமா? அவ்வாறு நடந்துகொண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். சட்ட ஒழுங்கையும், தர்மத்தையும் நிலைநாட்டும் பொறுப்புகளை பொலிஸாருக்கும், மதத்தலைவர்களும் மாத்திரமே வழங்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக