12 செப்டம்பர் 2011

இலங்கையிலிருந்து ஐ.நாவை வெளியேற்ற முயன்ற கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முடிபுக்கு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தையும் இலங்கையிலிருந்து வெளியேற்றுவதில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ‌­ தீவிரமாக இருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையில் தனது பணிகளை முடித்து வெளியேறும் போது கோத்தபாய ராஜபக்­ஷ‌வை இறுதியாக சந்தித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட மறுநாள் இவர்கள் இருவருக்கும் இடையிலான இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அப்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கோத்தபாய ராஜபக்­ஷ‌ முன்வைத்ததாக றொபேர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது போர் முடிபுக்கு வந்து விட்டதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கையில் இனி வேலையில்லை என்றும் கோத்தபா ராஜபக்­ஷ‌ கூறியுள்ளார். களமுனையில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர்களின் எதிர் மறையான அணுகு முறையே அதற்குக் காரணம் என்றும் கோத்தபாய ராஜபக்­ஷ‌ இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகள் உணர்வுகளை கொந்தளிக்க வைத்து பிளவுகளை அதிகமாக்கி விடுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கெடுத்து விடும் எனவும் கோத்தபாய ராஜபக்­ஷ‌ தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் இக் கூற்றை கடுமையாக நிராகரித்த றொபேர்ட் ஓ பிளேக் மனிதாபிமான நெருக்கடிகளின் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையோ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகள் எதனையும் வழங்கவில்லை என கோத்தபாய ராஜபக்­ஷ‌ பதிலளித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தரப்பில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட கோத்தபாய ராஜபக்­ஷ‌ சர்வதேச அமைப்புகளில் ஆசியர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவர்களால் தான் அரசாங்கத்தையும் படைத்தரப்பினரையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என கோத்தபாய ராஜபக்­ஷ‌ றொபேர்ட் ஓ பிளேக்கிக்கு கூறிய தாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக