மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு ஏதிராக தற்போது செயற்படவில்லை. இது எங்கள் அரசு. அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என 'யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி' நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழக்கித் தள்ளியுள்ளார் யாழ். மாநகரசபை முதல்வர்(ஈ.பி.டி.பி) யோகேஸ்வரி பற்குணராசா.
இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவருக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழங்கித் தள்ளினார். அதில் வழமை போன்று தன் புகழையும், மகிந்தாவின் புகழையும் பாடியதுடன் கடந்த கால அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் பிழை என்ற தனது தாரக மந்திரத்தையும் அவர் உச்சரிக்கத் தவறவில்லை.
அவர் ஆற்றிய உரையிலிருந்து,
நாம் கடந்த முப்பது வருட காலமாக போரைக் காரணம் காட்டி எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். கடந்த காலங்களில் எமது மாநகரசபை கட்டிடத்தின் புகைப்படத்தைக் கூட பாதுகாக்கத் தவறி விட்டோம். இந்த நிலைக்கு கடந்த கால மோசமான அரசியல் தலைமையின் வழிநடத்தலே காரணம் ஆகும்.
தற்போது அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்றே நான் கூறுவேன். எனக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஜனாதிபதி கூறியிருக்கின்றார் "இது உங்களுடைய அரசு. உங்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. நீங்களே பயமின்றி ஆளலாம். நாம் எந்தவிதத்திலும் தலையிட மாட்டோம்." என்று. எனவே இது எங்களுடைய அரசாங்கம். இந்த அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். என்று முழங்கித் தள்ளிய அவர்,
நேற்று எங்களின் ஜனாதிபதி ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றுகையில், எங்கள் பிரச்சனைகளுக்கு சர்வதேசத்தை இணைத்து தீர்வு காணத் தேவையில்லை. எமது நாட்டு மக்களை இணைத்துத் தான் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நான் வரவேற்கின்றேன். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக