09 செப்டம்பர் 2011

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்தக்கூடாது!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த மாநாட்டை 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்குவதையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்படி வழங்குவதாயின் வன்னியில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து உள்ளுர் மற்றும் அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு பொது நலவாய நாடுகள் அமைப்பு கடும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்ட பகிரங்க மடல் ஒன்றில் வலியுறுத்தி உள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவது தொடர்பாக தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள் எமக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் காரணமாக, 2011, 2013 காலப்பகுதிக்கான கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு தள்ளி வைக்கப்பட்டது.
போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், இலங்கையில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கள் மீதான ஒடுக்கு முறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன.
இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க் குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இவ்வாறான பின்னணியில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமன்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப் போகின்றது என்ற நிலையில், கூட்டம் இலங்கையில் நடத்தப்படுவது கவலை தருவதாகும். எனவே 2013 கூட்டத்தை நடத்துவதாயின் அதற்கு முன்னர் இலங்கை அரசு குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்க வேண்டிய நிபந்தனைகளை அமைப்பு முன்வைக்க வேண்டும். அவற்றுள் பின்வரும் விடயங்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்கள் அனைத்தையும் அவற்றின் தராதரத்துடன் இலங்கை உள்நாட்டில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் கௌரவத்துடனம் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புக்களை மீள உருவாக்குதல்
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைப் பாதுகாக்கத்தக்க செயல்திறனுள்ள, பொறிமுறை ஒன்றைச் செயற்படுத்த வெண்டும்.
நாட்டில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், குறிப்பாக 2009 மே மாதம் நிறைவடைந்த போரின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்தவை குறித்து உள்ளுர்மற்றும் சர்வதேசபக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஒத்துழைப்பையும் ஆதவையும் வழங்க வேண்டும்.ஐ.நா. செயலாளர்நாயகம் நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக
செயலாளர்நாயகம் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, ஒத்துழைத்துச் செயற்படுதல். ஆகிய கோரிக்கைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக