கடற்புலிகளின் தளபதி சூசை வீடு என நினைத்து சூலை என்பவரின் வீட்டைத் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் குதூகலத்துடன் புகைப்படம் எடுத்து ஏமாந்த சம்பவம் அண்மையில் புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.
தென்பகுதியிலிருந்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக வந்த தென்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வள்ளிபுனத்திலுள்ள கடையொன்றில் தமது வாகனத்தை நிறுத்திச் சூசையின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர்.
கடையில் இருந்தவர்களுக்குச் சூசை என்பது சூலை எனக் கேட்டுள்ளது. இதனால் கோம்பாவில் பகுதியிலுள்ள சூலை என்பவரின் வீட்டுக்கு வழிகாட்டியுள்ளனர். தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் சூலையின் வீட்டைச் சென்றடைந்தனர்.
அங்கே இரும்புக் குவியல்கள் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் கடற்புலிகளின் தளபதி சூசையும் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக எண்ணினார்களோ என்னவோ இரும்புக் குவியல்களை மளமள வெனப் புகைப்படம் பிடித்தார்கள்.
சூலையின் வீட்டிலுள்ள இரும்புக் குவியல்களைப் படம் பிடிப்பதில் அங்கு சென்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர். தென்பகுதிக்குச் சென்று புலிகளின் தளபதி சேகரித்து வைத்ததாக அந்த இரும்புக் குவியலைக் காட்டுவதில் அவர்கள் அக்கறையுடன் இருந்ததாகவே தெரிந்தது.
அப்போது அந்த வழியே வந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் அங்கே குழுமி நின்று வேடிக்கை பார்த்தனர். சூலையின் வீட்டுக்கு இன்று என்ன நடந்தது? என்று கேள்வியும் எழுப்பினர். பாவம் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசையின் வீடு என நினைத்துச் சூலையின் வீட்டைச் சல்லடை போட்டுக் கொண்டிருந்தனர்.இப்படியும் விநோதங்கள் வன்னிப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக