04 செப்டம்பர் 2011

தமிழர்களுக்கு எதிராக ஜெனீவாவில் களமிறக்கப்படுகிறார் இமெல்டா சுகுமார்!

இந்த மாத நடுப்பகுதியில் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக தற்போது இந்தோனேஷியத் தலைநகர் மணிலாவில் தற்போது நடைபெற்றுவரும் உலக உணவுத்திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள இமெல்டா, அங்கிருந்து நேரடியாக ஜெனீவா செல்வார் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவில் இறுதிவரை கடமையாற்றியவர் அப்போது அங்கு அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தும் இருந்தார்.
எனவேதான் அவரை இறுதிப் போர் குறித்த அரச தரப்பு சாட்சியாக ஜெனீவாவில் முன்நிறுத்த அரச தரப்புத் தீர்மானித்துள்ளது. போரின் நேரடிச் சாட்சி என்ற வகையில் அரசு மீதான குற்றச்சாட்டுக்களைத் தமிழர் ஒருவரை வைத்தே முறியடிக்க அரசு இராஜதந்திர ரீதியில் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
போரின் பின்னர் அரசு மேற்கொண்ட நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை முன்னிறுத்தியே ஜெனீவாவில் அரச தரப்பு தன்னை நியாயப்படுத்தும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக, வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களின் முழுமையான விவரம் மற்றும் மீளக்குடிய மர்த்தப்பட்ட மக்களின் விவரங்கள் என்பவற்றை வடக்கில் உள்ள அரச செயலகங்களில் இருந்து அரசு பெற்றுக் கொண்டுள்ளது.
மெனிப் பாமில் ஆரம்பத்தில் எத்தனை பேர் இருந்தனர், இப்போது எத்தனைபேர் இருக்கின்றனர் மற்றும் மீள்குடியமர்வுப் பணிகளின் விவரங்கள் என்பவற்றை அரசு என்னிடம் கேட்டிருந்தது. நான் ஜெனீவாவுக்கு அழைக்கப்படவில்லை. யார் செல்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று கூறினார் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.சாள்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக