30 செப்டம்பர் 2011

உங்கள் பிரச்சனையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்"மகிந்தவிடம் மன்மோகன் கூறினாராம்?

இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.
இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.
சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக