03 செப்டம்பர் 2011

சிங்களப்படைகளால் பெரும் தொல்லை!அவர்களை எப்படியாவது எமது பகுதிகளை விட்டு வெளியேற்றுங்கள்!

எங்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவர்களால் எங்களுக்கு தொடர் பிரச்சினையாகவுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும் அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில் பகல் இரவு நேரங்களில் இராணுவத்தினர் எமது பகுதிக்குள் வருவதும் அவர்கள் வந்து சிறிது நேரத்தில் மர்ம மனிதர்கள் வருவதும் நாம் மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்காகச் செல்லும்போது இராணுவத்தினர் அங்கு வந்து தாக்குதல் நடத்தி விட்டு வீதிகளில் நிற்க வேண்டாமெனவும் மர்ம மனிதர்களைக் கண்டால் எம்மிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அச்சுறுத்தி விட்டும் செல்வதுடன் அடிக்கடி எமது பகுதிகளுக்குள் வந்து செல்கின்றார்கள்.
இராணுவத்தினர் தமக்குப் பாதுகாப்புக்கு ஆயுதங்களை வைத்துக் கொண்டு எம்மை அவற்றைக் காட்டி அச்சுறுத்தி வருகின்றனர். நாம் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில் தற்போது உருவெடுத்திருக்கும் மர்ம மனிதரின் நடமாட்டத்தால் எமது வீடுகளில் நிம்மதியாக வாழமுடியாதுள்ளது.
எமக்கு நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கித் தரவேண்டும். எமக்கு இராணுவத்தினர் தேவையில்லை.
இவர்களாலேயே இத்தகைய பிரச்சினைகள் உருவாகிவருகிறது. மர்ம மனிதன் பெண்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றான். இவர்களை துரத்திச் செல்லும் ஆண்களை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகிறார்கள். அப்படியானால் பெண்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை நாம் எவ்வாறு யாரிடம் முறையிடுவது? மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களிடமே நாம் முறையிட முடியும். எனவே, எமக்கு நிம்மதியாக வாழுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்தவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பார்வையிட்டபோது தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் இராணுவத்தினர் வீதியில் வைத்துத் தாக்கிவிட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து எனது மர்ம ஸ்தானத்தில் மிளகாய்த் தூளைக் கொட்டியும் பெற்றோலை ஊற்றியும் அடித்து உதைத்தனர். வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என அழுத நிலையில் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு நபர் தனக்கு நடந்த நிலைமை தொடர்பாக தெரிவிக்கையில் நான் வீட்டிற்குள் உறக்கத்திலிருந்தபோது தட்டி எழுப்பிய இராணுவம் முகத்தை மூடி நிலத்தில் படுக்கவைத்து என்னைத் தாக்கி நான் இறந்து விட்டதாகக் கருதி தூக்கி எறிந்து விட்டுச் சென்றது. தற்போது நான் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் இங்கு கிடக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக