05 செப்டம்பர் 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது இலங்கை படைகள் தாக்குதல் நடத்தியதை உலகே அறியும்!

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, தான் இலங்கை ஜனாதிபதியின் அப்போதைய ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாள்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பஸில் ராஜபக்ஷ வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5 ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.
பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்தது என பஸில்ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டன. இலங்கை அரசு கடப்பாட்டை மீறுவதாக உள்ளது எனவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத்தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தத் தகவல்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசு அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.
பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக இலங்கை அரசு உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்தது எனவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஷ இரு அண்மைய சந்திப்புக்களின்போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தினர் என ஒப்புக்கொண்டுள்ளார்.ஆனால் அந்த விடயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வேத் தூதுவர் கூறியிருக்கிறார்.
ஆனால், மிக மோசமான மனித நேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்தன எனவும், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குவதற்கு அப்பால், தமது முன்னைய கரிசனைகள் பலவற்றுக்கு இலங்கை சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த நாடுகள் கூறியது எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக