அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மீண்டும் சென்றமை, தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்கான முனைப்புக்காட்டி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை அடுத்து கொழும்பில் உள்ள ஊடகத்தினைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவுடன் தான் மேற்கொண்ட சந்திப்புத் தொடர்பிலான சில தகவல்களை வெளியிடுமாறு கோரி சில விடயங்களையும் கூறியிருக்கின்றார். அதனை அடுத்து அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதாவது,
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை (Terms of reference) மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தாங்கள் சாதகமாகப் பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றார் என நம்பகரமாகத் தெரியவந்தது.
கடந்த 2ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பில் சம்பந்தர் இதனைத் தெரிவித்திருக்கிறார். சில இராஜதந்திர மட்டங்களின் முன் முயற்சி மற்றும் அழுத்தத்தினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியவருகின்றது.
இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கான நிலைமைகள் தொடர்பான தங்களது தரப்புக் கருத்து நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
அரசுத் தரப்பில் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களுக்கும், இடையில் தற்போது இடம்பெற்றுவரும் தீர்வு முயற்சிக்கான பேச்சுகள் ஒருபுறம் தொடரவேண்டும்.
அந்தப் பேச்சுகளில் எட்டப்படும் முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனையாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைக்கும். அதேசமயம், மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலூக்கம் உள்ள ஒரு கட்சியாக முழு அளவில் பங்குபற்றவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின்போது சம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிய வந்தது.
அப்போது, தெரிவுக்குழு அமைப்பதற்கான நோக்கம் குறித்து நாடாளுமன்றப் பத்திரத்தில் அரசுத் தரப்பு குறிப்பிட்டிருக்கும் கருத்துரையை (Terms of reference) கடுமையாகச் சாடி சம்பந்தர் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
போர் முடிந்துவிட்டது; சமாதானம் பிறந்துவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என ஆலோசித்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதாகவே நாடாளுமன்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில், நல்லிணக்கத்துடன் சமாதானத் தீர்வை எட்டுவது, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக அதன் கருத்துரை (Terms of reference) மாற்றப்படவேண்டும்.
அவ்வாறு அந்த இலக்கை மாற்றுவீர்களாயின், ஒருபுறம் அரசுத் தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பங்குபற்றுவது குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” என்று சம்பந்தர் பதிலளித்தார் எனவும் அறிய வந்தது.
அதனை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அச்சந்திப்பில் தம்முடன் இருந்த தமது செயலாளர் லலித் வீரதுங்கவிடமும், அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடமும் சம்பந்தரின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி பணிப்புரை விடுத்தார் எனவும் அறியவந்தது. சம்பந்தரின் கருத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கத்துக்கான கருத்துரையை மாற்றியமைக்க முடியுமா? என்பது குறித்து கவனம் எடுக்கும்படி தம்மை ஜனாதிபதி நேரில் தொடர்பு கொண்டு பணித்தார் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பின்பு சம்பந்தருக்குத் தெரியப்படுத்தினார் எனவும் அறியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அல்லது நாளை கொழும்பில் நடைபெறும்போது இந்த விடயங்கள் குறித்து மற்யை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் அறியவந்தது. என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக