தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரிடையே சுயநிர்ணயம் பற்றிய தளம்பல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு நூல்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாம் எதை எடுத்துக் கொண்டாலும் எமக்கு பின்னால் எமக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் உயிர் கொடுத்துள்ளார்கள். இலட்சக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தி உயிர் துறந்து போயுள்ளார்கள் என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.
இன்று தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமை பற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள்.
சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம் திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள்.
மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள். வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஞ்ஞாபனங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நழுவுகின்றவர்களை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள்.
நாம் சுயநிர்ணய கோட்பாடுகளில் இருந்து என்றும் மாறப் போவதில்லை. எமது தேசிய அபிலாசைகளுக்கான பயணம் தொடரும். வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக வழி உரிமைகளுக்கான அடி நாதமாக விளங்குகின்றது.
எனவே பல்வேறு தலைமுறைகள் தலைமைகள் ஊடாக வந்தவர்களை ஒரே மேடையில் வைத்து தமிழ் மக்கள் பார்ப்பது சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலேயே என்பதை யாரும் மறக்கக்கூடாது. மக்கள் தந்திருக்கின்ற ஆணையின்படி வெளிப்படையான அரசியல் பயணம் நடக்க வேண்டும் எனறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக