14 செப்டம்பர் 2011

நான் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதை துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி தடுத்தது!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இலங்கைக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச்செயலர் ரொபட் ஓ பிளெக் இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்தார்.வடக்கில் வலுவான துணை இராணுவ பிரசன்னத்தைக் கொண்ட அமைப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈபிடிபி) ரொபட் பிளேக் குறிப்பிட்டார். ‘துணை இராணுவக் குழுக்கள் பகிரங்கமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்’ என அவர் கூறினார்.
‘மனித உரிமைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன். துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதன் அவசியம், இதில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். வடக்கில் தமிழ் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம். அதனால் இராணுவம் இப்பணிகளை செய்ய வேண்டியிருக்காது’ என அவர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன இன்னும் அமுலில் உள்ளதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை நடைமுறையில் குறைந்தளவு விளைவையே ஏற்படுத்தும் என தனக்கு தெரிவிக்கப்பட்டப்பட்டதாகவும் ரொபர்ட் பிளெக் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தீவிரமாக கருத்திற்கொள்வது தமக்கு ஊக்கமளிப்பதாக ரொபட் பிளெக் கூறினார்.
அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த தமது முக்கிய பேச்சுவார்த்தையை தாம் மீள ஆரம்பிப்பகவுள்ளதாக அரசாங்கம், த.தே.கூ. ஆகிய இருதரப்பினரும் கூறியதில் நான் மிக மகிழ்வடைந்தேன்’ என அவர் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கருத்துத்தெரிவிக்கையில் , அதன் அறிக்கை வெளிவருதற்குமுன் அந்த ஆணைக்குழு தொடர்பில் தீர்ப்புகூறுவது காலத்திற்கு முந்திய நடவடிக்கையாக அமையும் என்றார்.
எனினும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதாததாக இருந்தால் சர்வதே அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.
‘நாம் நண்பர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்காக நம்பகமான பொறுப்புடைமை செயன்முறையொன்று அவசியம். அது நடைபெறுவதை உறுதிப்படுத்துவத்றகான சில பொறிமுறைகளுக்கான அழுத்தம் இருக்கலாம். ஆனால் அது (அத்தகைய அழுத்தம்) தேவையில்லை என நான் எண்ணுகிறேன்’ என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக