மகிந்த அரசினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி நான் கூறிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென்றால் உண்மையினை அரசாங்கத்தால் நிரூபித்துக் காட்ட முடியுமா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
தாம் தெரிவித்த இக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் கண்டனம் என்று கூறுவதனை நான் ஏற்க மாட்டேன். தனிப்பட்ட, பெயர் குறிப்பிடாது அரசாங்கம் என்று குறிப்பிடப்ட்டுள்ளது. பெயர் இல்லாத கண்டனம் உண்மையானதல்ல.
நான் உறுதியாகக் கூறுகின்றேன் தமிழர் பகுதிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து வருகின்றது. நில அபகரிப்பு, இன ஒழிப்பு செய்வதற்கான நடவடிக்கையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசு இவ்வாறான குடியேற்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.
நான் கூறுவது உண்மைக்குப் புறம்பானதென்றால் அரசாங்கம் உண்மையினை நிரூபித்துக் காட்ட வேண்டும். அரசு மோசமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே பெயர் குறிப்பிடாது செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவை ஏற்படின் நீதிமன்றமும் செல்வோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெ யரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்து வரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக