05 செப்டம்பர் 2011

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தருஷ்மன் அறிக்கை என ஸ்ரீலங்கா அரசு பாணியில் பேசிய மாவை சேனாதிராஜா!

லண்டனில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிதரன் மற்றும் மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஹரோ நகரப்பகுதியில் அமைத்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக் கூட்டம் தாயக மக்களின் மறுவாழ்வு தொடர்பான கலந்துரையாடல் கூட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாயக மக்களின் அவல நிலைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரனும் மாவை சேனாதிராஜாவும் உரையாற்றி இருந்தனர் தாயக மக்களின் அவல நிலைகள், இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள், மற்றும் தொடரும் இன அழிப்புக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். இக் கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்காக தாம் தொடர்ந்து செயற்பட்டுவருவதாக தெரிவித்ததோடு, அதற்காக தாம் தொடர்ந்து உழைக்கவிருப்பதாக தெரிவித்தார். ஒஸ்லோ உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மாவை, 51 நாடுகள் உதவிபுரிவதாக உறுதியளித்த உடன்படிக்கையை ஏற்று அமுல் படுத்தாதது இருந்தது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் செய்த தவறு என்று சாரப்பட கருத்து வெளியிட்டிருந்தார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை – தருஸ்மனின் அறிக்கை சர்ச்சை
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை தருஸ்மனின் அறிக்கை என்ற சொற்பதத்தை பாவித்து உரையாற்றிய போது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் குறுக்கிட்டு, இலங்கை அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளே தருஸ்மனின் அறிக்கை என கூறுகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களின் சொற் தொடரை பாவிக்கின்றீர்கள் எனக் கேட்ட போது, தருஸ்மனின் அறிக்கை உண்மையில் ஐ.நா அறிக்கை இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த ஒருவர் மாவையிடம் ஜ.நா நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எங்காவது தருஸ்மனின் அறிக்கை என்று குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் இருத்தவர்கள் கூக்குரலிட்டுக் கத்தினர்.
பயங்கொண்ட அரசியல் தலைமைத்துவம் தமிழ் மக்களிற்கு வேண்டாம்
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ் மனிதர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். இராணுவம் மற்றும் பொலிசாருக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஒன்று திரட்டி அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் வெறுமனவே அறிக்கைகளை விட்டுவிட்டு இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்த மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்குமாறு தெரிவித்தார்.
சுயநிர்ணயக் கோட்பாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநிர்ணயக் கோட்பாட்டை ஒரு வெற்றுக் கோஷமாகவே பயன்படுத்துவதாக குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்தல் கால விஞ்ஞாபனக்களிலும் மேடைப் பேச்சுக்களில் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநிர்ணயக் கோட்பாட்டு பற்றி தெரிவிப்பதாகவும் இராஜதந்திரிகள் மற்றும் பேச்சுவார்த்தை மட்டங்களில் அதைக் கைவிட்டு விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டதோடு, அண்மையில் இந்தியாவில் நாச்சியப்பன் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட மாநாட்டில் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமை கோட்ப்பாட்டு பிரச்சினை எழுந்த போது, சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரித்த ஆனந்தசங்கரி பக்கம் சார்ந்து கருத்து வெளியிட்டதை சுட்டிக்காட்டி கூட்டமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாவை குறுகிய கால அவகாசத்தால் தமக்கு ஆராய்து ஒரு முடிவுக்கு வரமுடியாது போனதாக நழுவல் போக்கில் பதிலளித்திருந்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக