13 செப்டம்பர் 2011

லண்டனிலும் துரோகத்தனத்தை தொடரும் ஸ்ரீலங்கா தூதர் அம்சா!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது.
தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் இந்திய அரசின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக இருந்தார்.
இப்போது லண்டனிலும் அதே வேலையைச் செய்து வருகிறார். முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருவதால், அங்கிருந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசுக்குத் தெரிவித்திருக்கிறார் அம்சா.
இது பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி, முத்துமாரியம்மன் கோவிலையும் அங்குள்ள மாவீரர் நினைவுத்தூணையும் அப்புறப்படுத்திவிடவேண்டும் என்பதுதான் அம்சாவின் கொடூர எண்ணமாகும்.
ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள நாடு இங்கிலாந்து. அதன் போக்கை மாற்றும் வகையில் இலங்கைத் தூதர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் லண்டனில் உள்ள அனைத்துத் தமிழர்களின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் தமிழகத்திலும் இது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன், “தமிழர்களின் கலாச்சார சின்னமாக விளங்கும் லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை அகற்றுவதற்கு சிங்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்வரும் தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக