02 செப்டம்பர் 2011

யாழில் நித்திரையின்றி மக்கள்!இளைஞர்களுக்கும் படைகளுக்குமிடையில் முறுகல்.

சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததாகவும் சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களைக் கலைத்துப் பிடிக்க முற்பட்ட இளைஞர் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
கடந்த சில நாள்களாக ஆங்காங்கே இடம்பெற்று வந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. நகரப் பகுதி முதல் கிராமப்புறங்கள் வரை பரவலாகப் பல இடங்களிலும் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் செய்தியாளர்களும் மக்களும் தெரிவித்தனர்.பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வீடுகளில் ஐந்து, ஆறு குடும்பங்களாகச் சேர்ந்து இருந்தனர். பெண்கள் வீடுகளுக்குள் இவ்வாறு இருக்க ஆண்கள் வீடுகளுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பலருக்கு நேற்றைய இரவு நித்திரை இன்றிக் கழிந்தது.சில இடங்களில் வீடுகளுக்கு இந்த சந்தேகத்துக் கிடமானவர்கள் நுழைய முற்பட்டமையால் வீடுகளில் இருந்தவர்கள் பெரும் கூக்குரல் எழுப்பினார்கள். இவர்கள் கூக்குரல் எழுப்புவதை கேட்டு அயலில் இருந்தவர்களும் கூக்குரலிட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் அல்லோலகல்லோல நிலை ஏற்பட்டது.
சில பகுதிகளில் இந்தச் சந்தேகத்துக்கிடமானவர்களைப் பிடிப்பதற்கு இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் படையினரால் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பதற்ற நிலை ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் சென்ற படையினர் வீதிகளில் குவிந்திருந்த மக்களை உடன் வீடுகளுக்குள் செல்லுமாறு கடும் தொனியில் தெரிவித்தனர். அத்துடன் இராணுவத்தினர் சிவில் உடையிலும் சீருடையிலும் கையில் கொட்டன்களைத் தாங்கியவாறு வலம் வந்தனர். இரு இடங்களில் மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான நபர்கள் மூவர் அந்தப் பகுதிக்கு வந்த படையினரால் ஏற்றிச் செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
நேற்று நள்ளிரவு கடந்த பின்னரும் இந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் பல இடங்களிலும் தொடர்ந்ததாக பொதுமக்கள் பலர் உதயனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.கடந்த சில தினங்களை விட நிலைமை இன்று இரவு மிக மோசமாகவுள்ளது. எமது வீட்டுக்கு முன்னால் உள்ள வீடொன்றுக்குள் நுழைய முயன்றவர்களை அந்தப் பகுதியில் நின்ற இளைஞர்கள் துரத்தினார்கள். எனினும் சிறிது நேரத்தில் அங்கு அந்த சீருடையினர் அவர்களை எச்சரித்து வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினார்கள் என்றார் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக