
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படலாமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் மாபெரும் பேரணியொன்றை ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிங்கள மக்களைக் கொண்டு நடத்துவதற்கு அரச ஆதரவாளர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 13ஆம் திகதி ஜெனிவா ஐ.நா. தலைமையகக் கட்டடத்தின் முன் கூடுமாறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஏற்படும் செலவுகளை ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை இன தனவந்தர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிங்கள வர்த்தகர்கள் ஏற்றிருப்பதாகத் தெரிகிறது. எனினும் இதன் பின்புலத்தில் இலங்கைத் தூதரகங்களின் செயற்பாடு உள்ளது என்து நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எதிர்த்து இவர்கள் பெரும் பேரணியொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிகிறது.இதேவேளை, ஜெனிவாவில் எதிர்வரும் 19ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக