22 செப்டம்பர் 2011

இலங்கைக்கு எதிராக பிரேரணை!கனடா சமர்ப்பிக்கிறது.

சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது.
18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை இன்று காலை கனடா சபையில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரேரணைக்கு தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்தன.
தனக்கு எதிரான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் அதனைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றன என்று ஜெனிவாவில் இருக்கும் தமிழ்ச் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
கனடாவால் இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அது அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் எனத் தெரியவருகிறது. 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள, மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
சீனா இலங்கையைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் எண்ணிக்கையே சபையில் அதிகம் இருப்பதால் அவற்றின் ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே பிரேரணை வெற்றிபெறுவது தங்கியுள்ளது என்றும் அவை தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக