ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் 18ஆவது கூட்டத் தொடரில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கத்தின் தரப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரின் பின்னணியில் மனிதவுரிமைகளைப் பேணத் தவறிய நாடுகளுக்கு இலங்கை ஒரு உதாரணம் என நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்திய நிலையில் இவ்விருதரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளின் போது அரசாங்கங்களால் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் மனிதவுரிமை விவகாரங்களை பெரிதும் பாதிக்கின்றன.
போரின் போது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனிதவுரிமைகள் விவகாரங்களைப் பொறுத்தவரை போதாதவையாக இருந்தன. இவை அனைத்தும் அடிக்கடி மனிதவுரிமை விவகாரங்களை பாதித்ததுடன் வித்தியாசம் மற்றும் பாகுபாட்டு கலாசாரம் ஒன்றையும் ஏற்படுத்தின. இவை வன்முறை மற்றும் பழிவாங்கல் சுழற்சிகள் ஏற்பட வழிவகுத்தன. இலங்கை அத்தகையதொரு வகையைச் சேர்ந்தது என நவநீதம்பிள்ளை கூறினார். அத்துடன், முப்பதாண்டுகளில் தீவிரவாதத்தினால் மட்டும் இலங்கை பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அவசர காலச் சட்டத்தை நீக்கினால் மட்டும் போதாது என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்டங்களையும் அரசாங்கம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமரசிங்க விமர்சனம்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்துக்களை மகிந்த சமரசிங்க கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றும் போது, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு கையளிக்க செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இம்மாதம் 9ஆம் திகதி மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம். உங்களுடன் இடம்பெற்ற முன்னைய கலந்துரையாடலின் போது நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு கையளிப்பது குறித்து நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 29 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிந்து கொள்ள நேர்ந்தமை என்பது உங்களுக்கும் எனக்கும் அசெளகரியமானதாகும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதனிடையில், இக்கூட்டத் தொடரில் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் தரப்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறுவதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உருவாக்கும் புதிய இலங்கைக்கு விரோதமான சில குழுக்கள் அல்லது தனிநபர்களினால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற நியாயமற்ற பரப்புரைகளை, தம்மிடமுள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி வெற்றி கொள்வோம் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். நாம் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம். எமது அனைத்து நண்பர்களுடனும் திறந்த மனதுடனும் பரஸ்பர மதிப்புடனும் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்பதையும் நியாயமான எண்ணம் கொண்ட எந்த நபரும் ஏற்றுக் கொள்வர்.
இவற்றுக்கான பிரதியுபகாரமாக எமது நல்லெண்ணத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பை எமக்கு வழங்குமாறு நாம் கோருகிறோம் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக