ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜே.வி.பியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையும், அக்கட்சியின் ஊடகப்பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு விரிசல் அடைந்து வருகின்றது. இதனால் சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு அதிகளவான முன்னுரிமை அளித்தல் மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜே.வி.பியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கட்சியிலிருந்து புறம்பாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
அதேவேளை, ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதால் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினை பிளவாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
அரசு, ஐக்கிய தேசியக்கட்சி, அமைச்சர் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியாக ஜே.வி.பியைப் பிளவுபடுத்த நினைக்கும் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியிலிருந்து எவரையும் விலக்கவோ எவரும் விலகவோ இல்லை என்று கூறிய அவர், இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது கட்சி உறுப்பினர்கள் சுமுகமாகத் தமது கடமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக