21 செப்டம்பர் 2011

மனித உரிமைப்போருக்கு கனடிய தமிழர்கள் அளித்த பெரும் நன்கொடை!

கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களால் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலுள்ள தொம்ஸன் பூங்கா மஞ்சள் சாயத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது.
முழு மஞ்சள் நிற ரீசேர்ட் அணிந்து, ஸ்காபரோ நகரைச் சுற்றி 5 கிலோ மீட்டர்கள் நடந்து வந்த நடைபவனியினர், மனித உரிமைகளுக்காக பாடுபடும் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக 50,000 டாலர்களை சேர்த்துக் கையளித்தனர்.
இதைத்தொடர்ந்து தொம்ஸன் பூங்காவில் பல நிகழ்ச்சிகளும் உரையாற்றல்களும் நடந்தேறின. பலவயதைச் சான்றோரும் (செல்ல நாய்க்குட்டிகள் உட்பட) பங்குபெற்ற இவ் நடைபவனி ரொறன்ரோ சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல தமிழ் சமூக நிறுவனங்களால் ஆதரிக்கப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைபவனியை முன்னிட்டு நடந்த ஆரம்ப விழாவில் பல அரசியல் பிரதிநிதிகளும், சமூகத் தலைவர்களும் பங்கேற்றி உரையாற்றினர். ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் திரு. மைக்கல் தொம்ஸன், மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு. லோகன் கணபதி, ஸ்காபரோ சென்றர் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திரு. பிராட் டுகுய்ட், ஸ்காபரோ கில்வுட் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திருமதி மாகிரட் வெஸ்ட், ஸ்காபரோ ரூஜ் ரிவர் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி ராதிகா சிர்சபைஈசன், ஸ்காபரோ கில்வுட் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஜோன் மக்கே, பீச்சஸ் பாராளுமன்ற உறுப்பினரான திரு. மத்தியூ கெல்வே ஆகியோர் தமிழர் சமூகத்தின் முன்னோக்குக் கொள்கைகளை பாராட்டி இவ்வைபவத்தில் உரையாற்றினர்.
மற்றும், தற்போது நடக்கவிருக்கும் ஒன்றாரியோ மாகாண தேர்தல்களில் போட்டியிடும் திரு. நீதன் ஷான், திரு. ஷான் தயாபரன், திருமதி கத்லீன் மதுரீன் ஆகியோரும் இந்த நடைபவனியில் பிரசன்னமாகியிருந்தனர்.
ஒன்றாரியோ மாகாண பிரதமர் மதிப்பிற்குரிய திரு. டால்டன் மகின்டி, கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி நிக்கோல் டேர்மெல், கனடா லிபரல் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. பாப் ரே ஆகியோரின் சிறப்புச் செய்திகள் அவர்களது பிரதிநிதிகளால் வாசிக்கப்பெற்றன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடாக் கிளை செயலாளர் நாயகம் திரு. அலெக்ஸ் நீவ் மனித உரிமைகளுக்காக பாடுபட வேண்டிய தேவைகளை வலியுறுத்தி உரையாற்றி அதனை ஆதரிக்கும் தமிழ் சமூகத்தை மனம்திறந்து பாராட்டினார்.
சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பித்து இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதைக் கொண்டாடும் முகமாக ஒரு பிறந்தநாள் ‘கேக்’கும் வெட்டப்பட்டது இவ் நடைபவனி வைபவத்திற்கு பொலிவைக்கூட்டியது.
கனடிய தமிழர் பேரவை கடந்த மூன்று வருடங்களாக நடைபவனிகளை ஒழுங்குசெய்து வெற்றிகரமாக நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடங்களில் சிக் கிட்ஸ் பவுன்டேஷனுக்கு 42,000 டாலர்களும், கனடா கான்சர் அமையத்துக்கு 36,000 டாலர்களும் இவ் நடைபவனிகளால் நிதி சேகரித்து வழங்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் சேகரிக்கப்பெற்ற 50,000 டாலர்கள் மனித உரிமைகளின் மகத்துவத்தை கனடியத் தமிழர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக ஈழத்தில் அல்லல்பட்டுவரும் அநேக தமிழர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் இடைவிடாத மனித உரிமை போராட்டங்களும், உண்மை நிலைமையை வெளிப்படுத்தும் அறிக்கைகளும் உதவி புரிந்து வருகின்றன.
அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சிச் ‘சனல் 4′-ஆல் தயாரிக்கப்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படமும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவைப் பெற்றிருந்தது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கபெற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இன்று உலகளாவ வளர்ந்து அநேக நாடுகளில் நடைபெறும் அந்நியச் செயல்களை எடுத்துக்காட்டி மனித உரிமைகளுக்காக போராடுவது தமிழர் சமூகம் செய்த மிகப்பெறும் பாக்கியமாகும்.
அதன்பாலான ஒரு சிறு நன்றிக்கடனே கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக