மாண்புமிகு இமெல்டா அம்மையாருக்கு வணக்கம்! உங்களுக்கு பகிரங்க மடல் எழுதும் நிர்ப்பந்தம் எழுந்தமை தவிர்க்கப்பட முடியாதது என்ற நிலையில் தான் எழுதுகின்றோம். வணக்கம் நீங்கள் மக்களுக்காக ஆற்றுகின்ற பணிகள் (!) அளவிட முடியாதவை தான்.
இன்று கூட ஊடகங்களில் எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவின் மத்தியில் நின்று நான் பணிபுரிந்தவள். அந்த வேதனை எனக்குத்தெரியும். மக்களுடன் 8 வருடம் பணியாற்றியவள். அதனால் அந்த மக்களுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும்.
30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் நாங்கள் பலவற்றினை இழந்துவிட்டோம். அவற்றை மீளக்கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்.
எனினும் நடந்து முடிந்த போரைப்பற்றி அங்கு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.அவ்வாறு சாட்சி சொல்வதற்காகவும் நான் அழைக்கப்படவில்லை. எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு மீள் குடியமர்வும் அபிவிருத்தியுமே. யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான தகவல் திரட்டியுள்ளேன். இன்னும் செய்யப்பட வேண்டியுள்ள பணிகள் குறித்தும் தகவல்கள் ஜெனீவாவில் தரப்படும்.யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் ஜெனீவாவில் தெரிவிக்கவுள்ளேன் என்று நீங்கள் தெரிவித்திருக்கின்ற கருத்து எங்கள் மனதை பிழிந்தெடுத்திருக்கிறது.
நீங்கள் ஊடகங்களில் சொல்லியிருக்கின்ற கருத்தினை ஜெனீவாவில் ஒப்புவிப்பீர்களா? என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவர் மனங்களிலும் அலை மோதுகின்றது.
முல்லைத்தீவில் இருந்து நீங்கள் சொல்லிய செய்தி உலகை எட்டியதே?!
போர் நடைபெற்ற போது அங்கு நீங்கள் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதிகளில் எறிகணைத் தாக்குதல் நடைபெற்ற போது அதில் பாதிக்கப்பட்ட நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் உடனடியாகவே உலகை எட்டியிருந்தன. ஒரு அரச அதிகாரி இவ்வாறு மக்களுக்காக துணிந்து நின்று கதைப்பது பெரியவிடயம் தான் என்று புலத்தில் உள்ள மக்களும் பேசிக் கொண்டார்கள்.
முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கும் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கும் செப்பனிடப்படாத வீதிகளில் ஆழஊடுருவும் படையணியின் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் நீங்கள் பயணித்து மக்களுக்காக பணியாற்றிய சம்பவங்கள் இன்னமும் பசுமையாக உள்ளன. ஒரு பெண், ஆண்களுக்கு நிகராக அசாத்திய திறனுடனும் அசையாத மனதுடனும் மக்களுக்காக பணி செய்திருந்தீர்கள். இந்தப் பணிகளும் அதற்காக நீங்கள் கொடுத்த விலைகளும் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மக்களாலும் உங்களுக்கு கீழ் பணி புரிந்த அதிகாரிகளாலும் பெரிதாகப் பேசப்பட்டிருந்தன.
2009 ஜனவரியின் பின்னர் உங்கள் செயற்பாடுகள் முற்றிலும் மாற்றங்கண்டனவே?!
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக உங்களையும் அரச அதிகாரிகளையும் முல்லைத்தீவில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தது உங்களுக்கு இன்றும் நினைவிருக்கும் என்று நம்புகின்றோம். அழைப்புக் கிடைத்தவுடன் உங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகளுக்குக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் வன்னியில் இருந்து வெளியேறி ஒரே மூச்சாக மதவாச்சியில் உள்ள சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து உங்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கோத்தா அழைத்த விடயத்தினைச் சொல்லியிருந்தீர்களே? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நீங்கள் வெளியேறிய போது உங்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பார்த்தீபன் உங்கள் பணியினையும் தனது பணியினையும் ஒன்று சேர்ந்து தனது தலையில் போட்டுக்கொண்டு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 2009 மே 16ஆம் திகதி வரையில் இடையறாது பணியாற்றியிருந்தாரே அவரைப் பற்றியோ அவரது பணி பற்றியோ எங்காவது குறிப்பிட்டிருந்தீர்களா?
முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களின் தொகை குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவல்கள் தொடர்பில் நீங்கள் தொலைபேசியில் கடிந்து கொண்டதாக அப்போதே அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்குத் தெரியவந்திருந்தது.
மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் உங்களுக்கு குறைந்த அளவிலான சேவை செய்திருந்தால் ஏன் மேற்குலகிடம் அரசியல் தஞ்சம் பெற்றிருக்க வேண்டும்? மேற்குலகும் ஏன் அவருக்கு அரசியல் தஞ்சத்தினை வழங்கியிருக்க வேண்டும்? அவரே அங்கு செல்லும் போது உங்களால் எப்படி சாதாரணமாக இலங்கையில் இருந்து பணியாற்ற முடியும் என்பதிலிருந்தே உங்களின் உண்மை முகமும் வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
டக்ளஸை மிரட்டினீர்களாமே?!
யாழ்.மாவட்ட அரச அதிபர் கதிரையில் இருந்த அன்றைய அரச அதிபரும் தற்போதைய ஈபிடிபியின்ஆலோசகர் சபையின் முக்கியஸ்தருமான கே.கணேஸ் ”ஏலுமெண்டால் நீ யாழ்ப்பாணத்திற்கு அரச அதிபராக வந்து பார்” என்று சவால் விட்டதும் அதனை அடுத்து நீங்கள் தனிமையில் இருந்து கண்ணீர் விட்டதும், ”ப(B)வா அக்கா” என்று நீங்கள் செல்லமாக அழைக்கின்ற உங்கள் உறவினரான யோகேஸ்வரி பற்குணராஜாவே உங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கவலைப்பட்டதும் உங்களுக்கு இன்னமும் நினைவிருக்கலாம்.
ஆனாலும் கூட காதலி காதலனை மிரட்டுவது போன்று “நான் சாகப்போகிறேன், எனது மரணத்திற்கு நீர் தான் காரணம் என்று கடிதம் எழுதிவிட்டுத் சாகப் போகின்றேன்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாகவே நீங்கள் மிரட்டியிருந்தீர்களாம். இதனையும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொல்லியிருந்தீர்களாம். இவை நடந்த போதெல்லாம் உங்கள் தற்துணிவையும் ஆளுமையையும் உங்களுக்கு உங்கள் மீது இருந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றீர்கள் என்றல்லவா தமிழ் மக்கள் எண்ணியிருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மிரட்டலையும் மீறி யாழ்.மாவட்ட அரச அதிபராக கதிரையில் குந்திய நீங்கள் அதி வேகமாக அரச இராணுவப் பேச்சாளராக மாறியது எவ்வாறு?
போர் தொடர்பான அனுபவப் பகிர்வில் திருவாய் மலர்ந்தீர்களாமே?!
கொழும்பில் போர் தொடர்பான அனுபவப் பகிர்வில் நீங்கள் திருவாய் மலர்ந்தவற்றை சில நாட்களுக்கு முன்னர் சில ஊடகங்கள் மீள் பிரசுரம் செய்திருக்கின்றன அவற்றினை மீட்டிப்பார்க்கின்றோம்.
முல்லைத்தீவில் அரச அதிபராக நான் செயலாற்றிய காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர்.போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங் களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசிடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போதும் நான் விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானேன்.வடபகுதி மக்களை விடுதலைப் புலிகள் பணய மாக வைத்துக் கொண்டே போரை நடத்தினர். இந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப் புப் படையினர் எவ்விதத்திலும் பொதுமக்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்த வடபகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
அவர்கள் சட்டரீதியாகவும், நாகரிகமான முறையிலும் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் அச்_றுத்தலில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எந்தளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தினார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். தற்போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வடபகுதியில் தமிழ் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர். போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமாணங்கள் அனைத்தும் அரசால் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை மறந்து விடமுடியாது”
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலான சாட்சியங்களிலும் இதனைப் போன்றே கருத்துத் தெரிவித்திருக்கின்றீர்கள். ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் போதும் அப்பழுக்கற்ற இராணுவம் என்றும் அரசு என்றும் தெரிவிக்கும் உங்கள் கருத்துக்கள் தமிழ் மக்களை இன்னமும் சினத்தில் ஆழ்த்துவதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை.
பதவியை விடுமாறு உங்கள் பிள்ளைகள் வலியுறுத்தினராமே?!
உங்கள் பிள்ளைகள் உங்களை அரச அதிபர் பதவியினைத் திறந்துவிட்டு வாருங்கள். புலத்தில் உள்ள மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று உங்களை வற்புறுத்துவதாகவும் நீங்கள் தானே சொல்கின்றீர்களாம். அப்போ எதற்காக இந்த நன்றிக்கடன்.
தமிழினம் சிந்திய இரத்தம், கொடுத்த இலட்சக்கணக்கான உயிர் விலைகளுக்கான அறுவடைக்கான நாள்நெருங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி வரலாற்றில் உங்களை தனித்துக்காட்டாதா? இவ்வளவு அனுபவம் வாய்ந்தவரான நீங்கள், வடக்கில் இருக்கின்ற அரச அதிபர்களிலேயே தகுதியும், அனுபவமும் மிக்கவர் என்று தெரிவிக்கின்ற நீங்கள் உலக மனச்சாட்சியினை மீறி இனத்துரோகத்தினை இழைக்கப் போகின்றீர்களா? என்பதை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் சாட்சியமளிப்பதாக இருந்தால் உள்ளதை உள்ளவாறே சொல்லுங்கள். அது விடுதலைப்புலிகளாக இருக்கலாம், இராணுவமாக இருக்கலாம் யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் அதில் ஒளிவு மறைவுகளை தயவு செய்து நீங்கள் செய்துவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஜெனீவாவில் நீங்கள் கதைக்கவுள்ளது மீள்குடியமர்வும் அபிவிருத்தியும் பற்றியாமே?!
”மீள் குடியமர்வும் அபிவிருத்தியும்” உங்கள் ஜெனீவா கருத்தரங்கின் கருப்பொருள் என்று நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். மீள்குடியேற்றம் ஏன் செய்யப்பட வேண்டும்? அந்த மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். உண்மையில் மீள்குடியேற்றம் அபிவிருத்தி என்பன பெயரளவில் மட்டும் தான் உள்ளன என்பதை உங்களால் சொல்லமுடியுமா? இவற்றை விட்டு அரசாங்கத்தினையும், இராணுவத்தினையும் தூக்கி நிறுத்துகின்ற பணியினைத்தான் செய்யப் போகின்றீர்களா?
உங்களைப் போன்ற மற்றொரு பெண் அரச அதிபரையும் ஜெனீவாவிற்கு அழைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் இருந்து அவர் நழுவியிருப்பதாக அறிகின்றோம். நீங்கள் உங்கள் பிரதான எதிரிகளில் ஒருவராக வரித்திருக்கின்ற அவரால் நழுவிக் கொள்ள முடியும் என்றால் ஏன் உங்களால் முடியவில்லை.
காணொளியில் உள்ளது நீங்களா?
ஆனாலும் ஒரு தாயாக, ஒரு தமிழ்ப் பெண்ணாக, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனித உயிராக கீழ் இணைக்கப்படுகின்ற காணொளியினைப் பாருங்கள். அதில் சொல்லப்படுகின்ற தகவல்கள் கருத்துக்கள் உண்மையற்றவை என்றால் ஜெனீவாவில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உரை நிகழ்த்துங்கள். ஒரு கணம். ஒரே ஒரு கணம் மட்டும் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் காணொளியில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மையா? பொய்யா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி:சரிதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக