29 செப்டம்பர் 2011

வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை!

பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் முன்பு யுத்த பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றியும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குரல் கொடுத்துள்ளது. யுத்தத்துக்கு பின் மீள்குடியேறி வருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட இல்லை. சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடி நீர், கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்து வருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபெய்சிங்க கூறினார். இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினை தொடர்ந்த காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கிய கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதி பெர்னாட்ட சேவெஜ் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயங்குவதில்லை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப் போதும் ஆதரித்தே வருகின்றது. உறைவிடம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவியினை வழங்கி வருகின்றது.
இலங்கையின் அரசியல் நிலைவரம், மனிதவுரிமைகள் நிலைவரம் ஆகியன எமது மனிதாபிமான உதவித் திட்டங்களில் செலவாக்குச் செலுத்துவதில்லை. ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வருகின்றன. ஐ.நா. மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கையில் இந்த வருடம் ஐ.நா. சபை முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியில் சர்வதேச நிதி வழங்குநர்களிடமிருந்து நான்கில் ஒரு பகுதி நிதிதான் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக