16 செப்டம்பர் 2011

மகிந்தவின் மிரட்டலுக்கு அஞ்சி பேச்சுக்கு சம்மதித்தாரா சம்பந்தன்?

பத்துச் சுற்றுப் பேச்சுக்களுடன் இடைநடுவில் முறிந்துபோன அரசு கூட்டமைப்பு இடையிலான பேச்சு இன்று மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான அரச குழுவினரும் நாடாளுமன்றத் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனை தனிப்பட அழைத்து ஜனாதிபதி பேசியதன் அடிப்படையில் இன்றைய பேச்சுக்கு இரு தரப்பினரும் இணங்கினர் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் பேச்சுக்களின் போது என்ன விடயங்கள் குறித்து ஆராய்வது என்பது தொடர்பிலும் இணக்கம் காணப்படும் விடயங்களை உடன் நடைமுறைப்படுத்துவது என்றும் இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஊடகமான உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான அரசுகூட்டமைப்பு பேச்சுக்கள் 10 சுற்றுக்கள் இடம்பெற்றன. எனினும் முடிவுகள் எவையும் காணப்படவில்லை. இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வந்தது.
இறுதியில் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள பகிர்வுகள் மற்றும் பங்கீடுகள், நிதிக் கையாளுகை மற்றும் வரி அறவீடு என்பன தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விளக்க இருவார கால அவகாசம் கொடுத்த கூட்டமைப்பு, அதுவரை அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியைக் குறிப்பிட மறுப்புத் தெரிவித்தது.
எனினும், கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என்று தெரிவித்த அரசு, விடுதலைப் புலிகள் போன்ற நடத்தையை கூட்டமைப்பு வெளிப்படுத்துவதாகவும் சாடி இருந்தது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து அரசு எதனையும் வெளிப்படையாகப் பதிலளிக்காத நிலையில் இன்றைய பேச்சு ஆரம்பிக்கப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சனல் 4 காணொளி வெளியாகிய காலப் பகுதியிலும் இரா.சம்பந்தனை அழைத்து அமெரிகாவிற்கோ, இந்தியாவிற்கோ அஞ்சப் போவதில்லை என்று மஹிந்தராஜபக்ச மிரட்டல் விடுத்திருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந் நிலையில் சம்பந்தனை அழைத்த மஹிந்த மிரட்டியே பேச்சுக்கு சம்மதிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் நோக்கர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக