22 செப்டம்பர் 2011

தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம்!

சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.
இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.
எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.
நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.
26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.
அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.
சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.
தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.
சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.
சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.
முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.
செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.
பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.
தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.
நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக