20 செப்டம்பர் 2011

ஜெனீவா முன்றலில் பொங்கி எழுந்தனர் தமிழ் மக்கள்!

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்கு தமிழ் !
சுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பேருந்துகளில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10ஆயிரம் வரையான மக்கள் இந்நிகழ்வில் மிக எழுச்சி பூர்வமாகக் கலந்துகொண்டதை நேரில் காணமுடிந்தது.
சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபை முன்றலில், ஐரோப்பிய தமிழர்கள் ஒன்று கூடிய மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு பிற்பகல் 2.00 மணியளவில் கொட்டிய மழைக்கு மத்தியில் ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா சபை நோக்கி அணிவகுப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
பேரணியை வரவேற்று ஐ.நா. முன்றிலில் இருந்து பிரான்ஸ் தமிழ்ச்சோலை சோதியா கலைக்கல்லூரி மாணவர்களின் இன்னியம் நிகழ்வு மற்றும் தேசிய அணிநடை நிகழ்வுகள் இ;டம்பெற்றன. இது அனைவரையும் கவர்ந்தது.
பிற்பகல் 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.
தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.
தொடர்ந்து சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
இதில் முருகதாசனின் தந்தை உட்பட ஈகிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகச் சுடர் ஒளி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சகோதர இனப் பிரமுகர்கள் பொங்குதமிழ் நிகழ்வின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு குறித்தும் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் உரைநிகழ்த்தினர். இதற்கு தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜேர்மன் மாணவர்களின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. இது அனைவரையும் உணர்வுடன் எழுந்து நடனம் ஆடவைத்தது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ‘வெல்வது உறுதி” என்னும் குறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
கலந்து கொண்ட மக்கள் அந்த குறுவட்டை வாங்குவதற்கு முண்டியடித்தமையையும் காணமுடிந்தது.
தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து பொங்கு தமிழ் 2011 இற்கான பொங்குதமிழ் பிரகடனம் வெளியிட்டுவைக்கப்பட்டது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்விற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான குலுக்கல் இடம்பெற்றது.
அடுத்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக சுவிஸ் தமிழர் இசைக்குழுவினால் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டது. இதன்போது அனைவரும் எழுந்து நின்று தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நடனம் ஆடியமை அனைவரையும் உணர்ச்சிபொங்கச் செய்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக