17 ஏப்ரல் 2010

தேசியத்தலைவரின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டார்!




தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த தாயாரை, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இச் செயலுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:



தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16.04.2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.



படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.



கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.



இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை இன்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.



அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.



விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.



விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.



உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக