20 ஏப்ரல் 2010
கருணாநிதி சொல்வது நம்பும்படி இல்லை,விஜயகாந்த்..
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து வெளியே விடாமல் அவரை திருப்பி அனுப்பிய சம்பவம் தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி பேரவையில் கூறியிருப்பது நம்பக்கூடியதாக இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுதான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்? 2003-ம் ஆண்டில் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்து தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம். 1979-ம் ஆண்டிலிருந்தே பிரபாகரனின் பெற்றோர்கள் அவரைப் பிரிந்து தான் வாழ்கின்றனர். 2003-ம் ஆண்டில் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது மீண்டும் அவர்கள் இங்கிருந்து இலங்கை சென்றனர். பிரபாகரனை இந்தியா பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவித்ததற்கும் பிரபாகரனின் பெற்றோர்களுக்கும் என்ன சம்பந்தம்? வயதான காலத்தில் தனியே விடப்பட்டு தமிழினத்திற்கு தாய் நாடான தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று வந்த 80 வயதான பார்வதியம்மாளை இங்குள்ள அரசுகள் திருப்பி அனுப்பிய பொழுது அந்த தாய் உள்ளம் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக