14 ஏப்ரல் 2010

நாம் தமிழர் கொடி அறிவிப்பு.

நாம் தமிழர் கொடி அறிவிப்பு, பேரணி, பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் மிக எழுச்சியாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்தேறியது. நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் புதிய கொடியை வெளியிட்டார். நாம் தமிழர் பேராசிரியர் தீரன் கொடி விளக்கவுரை ஆற்றினார்.
முன்னதாக தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் புலிக் கொடி பேரணி துவங்கியது. செந்தமிழன் சீமான் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணியில் யானை ஊர்வலம், குதிரைகள் அணிவகுப்பு, மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி மேளம், பறை இசை போன்ற தஞ்சை மண்ணுக்குரிய கலைகள் நிகழ்த்தப்பட்டன. பேரணியில் குடந்தை நாம் தமிழர் புகழ்மாறன் என்ற வினோத் தலைமையில் நிகழ்ந்த சிலம்பாட்டக் குழுவின் சாகச காட்சிகள் பலத்த வரவேற்பை பெற்றன. பேரணி துவக்கத்தில் உடையாளூர் இராசராசன் நினைவிடத்தில் இருந்து நாகை நாம் தமிழர் மாறன், ராஜ் குமார் தலைமையில் ஊர்வலமாக வந்த குழுவினர் கொண்டு வந்த தீச்சுடர் மற்றும் புலிக் கொடியை செந்தமிழன் சீமான் பெற்றுக் கொண்டார். பேரரசன் ராசராசன் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட தஞ்சை திலகர் திடலில் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் உணர்வெழுச்சி கொள்கை பாடல் கச்சேரி நடைப்பெற்றது.
பிறகு மாலை 6.30 மணி அளவில் தஞ்சை திலகர் திடலில் நடைப்பெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திரைப்பட உதவி இயக்குனர்களின் கருப்புக்குரல் வழங்கிய இராச ராச சோழன் சரித்திர நாடகம் மிக அற்புதமாக நடந்தது. சோழ மன்னன் சிங்களர்களை தோற்கடித்து புலிக் கொடி நட்டதை மிக அற்புதமான வகையில் அய்கோ தலைமையிலான கருப்புக்குரல் குழுவினர் நிகழ்த்திக்காட்டினர். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் புதிய புலிக்கொடியை வெளியிட்டார். நிகழ்வில் மாநில,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் தீரன் கொடி விளக்க உரை ஆற்றினார். பேராசிரியர் தீரன் பேசிய போது புலிக்கொடியின் வடிவமைப்புப் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் பேசியது கருத்தை கவர்வதாக இருந்தது. இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பேராசிரியர் முனைவர் ச.மணி ,அருட்தந்தை சூசை,திலீபன், ஜெயசீலன், இயக்குனர் சிபி சந்தர் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். திருவாரூர் தென்றல் சந்திரசேகர் தீர்மானங்கள் வாசித்தார். பேரணி ,பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் மணிசெந்தில் என்ற திலீபன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரக்குமரன், கருணாநிதி ஆகியோர் மிக எழுச்சியாகவும், மிக பிரமாண்டமாகவும் செய்திருந்தனர். வாண வேடிக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்த இந்நிகழ்விற்காக தஞ்சாவூர் நகரமே விளம்பரத் தட்டிகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
செந்தமிழன் சீமான் இறுதியாக பேசும் போது புதிய புலிக் கொடியின் விளக்கத்தினை அளித்தார். தமிழினத்திற்கு எதிராக எது வந்தாலும் முதலில் தடுப்பதையும், பிறகு அடிப்பதையும் புலி வெளிப்படுத்துகிறது எனவும், சுற்றி இருக்கும் கருப்பு வட்டம் தமிழர்களின் இன்றைய நிலையை குறிக்கிறது எனவும், தமிழீழம் தமிழர்களின் தேசம் எனவும் , தமிழ்த் தாயின் மடியில் அந்நியன் தலை வைத்து படுத்திருக்கிறான் எனவும் , அவனை விரட்டாமல் தமிழர்கள் விழி மூடாது எனவும் ,திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டு இந்த மண்ணை நாசப்படுத்தி விட்டன எனவும், நாம் தமிழர் இவ்விரு கட்சிகளோடு எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்காது எனவும், மே 18 ல் மதுரையில் தோன்றும் நாம் தமிழர் தனிப் பெரும் கட்சியாக வளர்ந்து உலக தமிழினத்திற்காக போராடும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியினை மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் என்ற திலீபன் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக