20 ஏப்ரல் 2010

பையா!திரை நோக்கு.


தனக்கு விருப்பமான ஒரு பெண்ணுடன் பெங்களூரிலிருந்து மும்பை செல்லும் இளைஞன், வழியில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை.
வேலை தேடிக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரி இளைஞன் கார்த்தி. வேலைதேடி அப்ளிகேஷன் கொடுத்து சிபாரிசுடன் அலையும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் தமன்னாவை பஸ் ஸ்டாப்பில் பார்க்கிறார். பார்த்தவுடனே காதலில் விழுகிறார். அதன் பிறகு தனது நண்பனை அழைத்து வர அந்த நண்பனின் காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்கிறார். அங்கே மீண்டும் தமன்னாவை பார்க்கிறார். தமன்னாவோ கார்த்தியை டிரைவர் என்று நினைத்து காரை வாடகைக்கு அழைக்கிறார். உடனே சம்மதிக்கும் கார்த்தி, ரயிலில் வந்திறங்கும் நண்பனையும், அவரது குடும்பத்தையும் அம்போ என விட்டு விட்டு, தமன்னாவுடன் சென்னை புறப்படுகிறார்.
பயணத்தின் போது தனது அப்பாவின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் மும்பையில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக சொல்கிறார் தமன்னா. வழியில் தன் அப்பாவின் ஆட்கள் பின்தொடர்வது தமன்னாவுக்கு தெரிய வருகிறது, உடனே காரை வேகமாக ஓட்டச் சொல்கிறார். கார்த்தியோ "இது உன்னுடைய பிரச்சினை இல்லை, என்னுடையது" என்று காரை ஓரம் கட்டி அவர்களை துவம்சம் செய்கிறார். பின்பு இருவரும் மும்பை பறக்கின்றனர். கார்த்தியின் பழைய விரோதிகளும் தீர்த்துகட்ட விரட்டுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா? தமன்னாவை கார்த்தி கைபிடித்தாரா என்பது இறுதிக்காட்சி.
துறுதுறுவென வரும் கார்த்தியின் நடிப்பில் கொள்ளை அழகு! நண்பர்களிடம் தன் காதலை கார்த்தி ஃபீல் பண்ணும் இடங்கள் அருமை. லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியில் சும்மா அமர்க்களப்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் கார்த்தியின் சேட்டையால் திரையரங்கமே கலகலக்கிறது.
தமன்னா பொம்மை போல் பளிச் என வந்து தன் மென்மையான நடிப்பாலும், துடிப்பான பெண்மையாலும் வழக்கம்போல நம்மை கவருகிறார். பாடல் காட்சிகளில் தாராளமாய் கவர்ச்சி காட்டியிருக்கிறார். கார்த்தியை டிரைவர் என நினைத்து மும்பை போனதும் பணம் தருகிறேன் என சொல்லும் தமன்னாவின் அப்பாவித்தனம் பளிச். பின்பு காதலின் ஆழம் புரிந்து கார்த்தியை கட்டியணைப்பது ஜீவன்.
நண்டுவாக வருபவர் ஈர்க்கிறார். சோதா வில்லனாக மிலிந்த் சோமன். எந்த அளவு சோதா தெரியுமா... தான் தேடிக் கொண்டிருக்கிற கார்த்தி கண்ணெதிரே போகிறார், ஒரு குடையால் முகம் மறைத்தபடி. அட, அவரை அடையாளமே தெரியாமல் போகிறது வில்லனுக்கு. ஒரு சின்ன மருவை வைத்துக் கொண்டு கெட்டப் மாற்றிவிட்டதாகக் காட்டும் "தமிழ்ப் பட நக்கலு"க்கு குறைவில்லாத காட்சி!
திரையில் வராமல் போனிலேயே கில்லியாக தெலுங்கு பேசும் வில்லி, மகளுக்கே கொடூரம் இழைக்கத் துடிக்கும் அப்பா, ஓடிப்போனவள் மகள் என தமன்னாவை மும்பையின் வசதியான வர்த்தக குடும்பம் என பணக்காரர்களின் பயமான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கும் இயக்குனர் லிங்குசாமியின் பங்கும், பாங்கும் பிரமாதம். அதேநேரம் சண்டைக்காட்சிகள் லிங்குவின் முந்தைய படமான பீமாவையும், சேஸிங் காட்சிகள் சண்டைக்கோழி, கில்லி படங்களையும், படக்காட்சிகள் ரன் படத்தையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். "துளி துளி...", "அடடா மழைடா", "என் காதல் சொல்ல...". "சுத்துதே சுத்துதே....." பாடல்கள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறது. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார் யுவன்.
யுவனைப்போலவே மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். ஆன்டனியின் எடிட்டிங் ஒரளவு காட்சிகளை விறுவிறுப்பாக்க உதவுகிறது.
கார் பயணத்தில் கார்த்தியின் நாயகன் இமேஜை உயர்த்தவும், தமன்னா மனதில் இறங்கவும் இறுதிக்காட்சியை இன்னும் வலுவாக தொகுத்து இருக்கலாம். இயக்குனர் லிங்குசாமி, திரைக்கதையில் கொஞ்சமாவது புதுமையை தந்திருந்தால் படத்தின் வெற்றி இன்னும் அமோகமாக இருந்திருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக