14 அக்டோபர் 2013

தி எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது பாய்கிறது சிறிலங்கா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரனை சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்பதை, புதுடெல்லிக் கருத்தரங்கில் வலியுறுத்திய, தி எக்கொனமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாசிரியர் மீது, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் நடந்த 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கில், உரையாற்றிய தி எக்கொனமிஸ்ட் இதழின் ஆசியப் பிரிவு பொறுப்பாசிரியர் அடம் றொபேட்ஸ், சிறிலங்கா இராணுவத்தினரே பாலச்சந்திரனைப் படுகொலை செய்ததாகவும், சிறிலங்காப் படையினர் கைகளைப் பின்புறம் கட்டி போர்க்கைதிகளைப் படுகொலை செய்தது, குற்றவாளிகள் காணொலியை வெளியிட்டிருக்காவிட்டால் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற தொடரை வெளியிடும் சனல் 4 தொலைக்காட்சிக்கு நம்பகத்தன்மையை பெற்றுக் கொடுக்க, அனைத்துலக செஞ்சிலுகைக்குழு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நெல்சன் மண்டேலா நிலையம், ஜமியா, மில்லியா பல்கலைக்கழைகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கை, தி எக்கொனமிஸ்ட் இதழின் பிரதிநிதி, பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரும் கூட, போருக்குப் பிந்திய யாழ்ப்பாணம் குறித்து, இருண்ட விம்பத்தைக் காட்ட அடம் றொபேட்ஸ் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விடுதலைப் புலிகளை சிறிலங்கா அழித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அதனால் தான், போருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்குலக ஊடகங்கள் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக