18 அக்டோபர் 2013

தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்குவோம்" என்று பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தெரிவித்தார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் இன்று பிற்பகல் 3. 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில், தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, திருச்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு மகத்தான வெற்றி என்றார்.
காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றும், தமிழகத்தில் மாற்றத்திற்கான அலை நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால்தான் பைலின் புயலால் கூட இங்கே பாதிப்பில்லை என்று மோடி கூறினார்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, கருப்பு பணத்தை மீட்காமல் உத்தரபிரதேச மாநிலத்தில் புதையல் தோண்டுகிறது மத்திய அரசு என்று சாடினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்குவோம் என்றும் மோடி கூறினார்.
பா.ஜ. நிர்வாகிகளுடன் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உள்ள பா.ஜனதா தமிழக அலுவலகமான கமலாலயம் சென்றார் மோடி. அங்கு தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்கிறார்.
சென்னை பல்கலைக்கழகம்
அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழக, நூற்றாண்டு விழா கலையரங்கிற்கு செல்கிறார் மோடி. இங்கு நானி பால்கிவாலா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மோடியின் வருகையையொட்டி, விமான நிலையத்திலிருந்து தமிழக பா.ஜனதா அலுவலகம் வரும் பாதை, நூற்றாண்டு விழா கலையரங்கம் என பல பகுதிகளிலும், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக