இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத் தீர்மானத்தை திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை ஏற்று தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அத்தீர்மானத்தில், இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ள கூடாது. சிங்களருக்கு இணையாக தமிழர்களும் வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நிலையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் மீது சட்டசபை அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக