12 ஜூன் 2011

ஸ்ரீலங்காவை மாட்டவைக்க சதி நடக்கிறதாம்!சிங்கள நாளிதழ் அழுது வடிக்கிறது.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பில், ஐ.நா மனித உரிமை பேரவையில் கொலைக்களம் எனும் ஒரு பொய்யான வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுமதியுடன், ஐ.நா மண்டத்தில் இவ்வீடியோ திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் சிங்கள நாளிதழ் திவயின தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு போர்க்குற்றங்களை செய்துள்ளது என மனித உரிமை பேரவை கூட்டத்தில் உறுதிப்படுத்துவதற்காக 30 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும், இரண்டு ஊடக நிறுவனங்களும் சர்வதேச புத்திஜீவிகள் என கூறும் 10 பேரும் மனித உரிமை பேரவை கூட்டத்தில் மிகவும் இரகசியமான முறையில் சூழ்ச்சியொன்றை ஆரம்பித்திருப்பதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ஆவணப்படம் குறித்து பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்ககை நிராகரிக்கப்பட்டதாகவும், கையடக்க தொலைபேசிகளில் இந்த போர்க்கூற்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அந்த காட்சிகள் வீடியோ கமெரா ஒன்றினால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தியவின தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ தமிழர்களை மட்டுமல்ல நேர்மையான மனிதர்களையும் கொன்றார்.

இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சவைவை தண்டிக்கக் கோரி திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் பேசும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய ஒரு கடமை வந்திருக்கிறது. அந்த கடமையைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் நம் சொந்தங்கள் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இடையில் அவர்களை ராஜபக்ச அடித்து கொன்றாலும் கொல்வார். சுட்டாலும் சுடுவார். இவ்வாறு 6 ஆண்டுகளாக நம் மக்கள் அங்கு பல்வேறு அச்சத்துக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக்ச இப்படி தமிழர்களை மட்டும் கொல்லவில்லை, நேர்மையான மனிதர்கள் அனைவரையும் கொன்றார். எனவே மனித குலத்தின் முதல் துரோகியான ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும். பதிலாக இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைக்காரன் ராஜபக்ச, டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்திரனராக பங்கேற்றார். அப்போது இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவருக்கு மரியாதை கொடுத்தார். இதை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். எனவே ராஜபக்சவோடு கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற அவர்களிடத்தில் இருந்து தமிழர்களை மீட்டாக வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று, சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, இதை எதிர்க்க முடியாமல் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். சொல்லப்போனால் ராஜபக்ச முதல் குற்றவாளி என்றால், கருணாநிதி இரண்டாவது குற்றவாளி, மன்மோகன்சிங் மூன்றாவது குற்றவாளி. ஏனெனில் அவர் துப்பாக்கியால் சுட்டவர், இவர் குண்டு போட்டு கொடுத்தவர், அவர் குண்டு வாங்கி கொடுத்தவர். எனவே இந்த மூன்று பேரையும் முதலில் விசாரிக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி திஹார் சிறையில் இருக்க வேண்டியவர். இதுமட்டுமின்றி இன்னும் கொஞ்சம் காலத்தில் திமுக, திஹார் முன்னேற்றக் கழகம் என்று ஆனாலும் ஆகும்.
இலங்கையில் 2009 மே 19-ம் தேதி யுத்தம் முடிந்து விட்டதாக அறிவித்தும்கூட, மறுநாள் 20-ம் தேதி அங்குள்ள 4 லட்சம் தமிழர்கள் 17 இடங்களில் அமைக்கப்பட்ட கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். ரூ. 1.76 லட்சம் கோடியை கொள்ளையடித்து விட்டு, அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழிக்காக கவலைப்படும் கருணாநிதி, இலங்கையில் 2009 மே 20-ம் தேதி முதல் இன்று வரையில் கம்பி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கும் நம் தமிழர்களுக்காக ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. எனவே இலங்கையில் வாழும் நம் சொந்தங்களை, ஒரு பாவமும் தெரியாத அந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற புனித போரில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையேதான்,இப்படி கொடூரத்தை வேறெங்கும் கண்டதில்லை!

பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பொன்றில் பேசுகையில் சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே என கூறினார். சிறீலங்காவில் இடம்பெற்ற இக்கொடுமையை போல் ஒன்றை தான் வேறெங்கும் கண்டதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்.....
எங்களுக்கு தெரியும், அங்கே நடந்த கொடிய போரைப்பற்றி. வைத்தியசாலைகள் மீது குண்டுவீச்சு, எறிகளை தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் எமக்கு தெரியும் எனவும்...
சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் சிறீலங்காவில் இவ்வாறான கொடிய போருக்கும், அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளதாகவும், சிறீலங்காவில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக்கொண்டு அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், அதேவேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு தான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப்போல் நடாத்தப்படுவதை தான் கண்டதாகவும், இந்த விடையத்தில் தமிழக அரசியல் வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலு தெரிவித்தார்.

11 ஜூன் 2011

சனல் போர் வெளியிடப்போகும் இன அழிப்பு பயங்கரக் காணொளி.கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக பார்க்கக் கூடாதென எச்சரிக்கை.

சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது. அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்றன.
ஐநாவின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மரணதண்டனைகள் தொடர்பான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆல் 'போர்க்குற்றங்கள்;' என வரையறுக்கப்பட்ட இந்த ஆதாரங்களான காணொளிக்காட்சிகள் 2009 காலப்பகுதியில் தமிழ்ப் போராளிகளுடனான இறுதிப் போரில் பெற்ற வெற்றியின் சின்னங்களாக இலங்கைப் படையினரால் தங்களது கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தன.
இந்த ஆதாரங்கள் இதுகாலவரை ஐநா செயலாளர் பான் கீ மூனினால் உத்தரவிடப்படாதிருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டது போலத் தோன்றும் உடைகள் எதுவுமற்ற தமிழ்ப் பெண்களுடைய உடல்களை சிறிலங்காப் படையினர் சிரித்துப் பேசியபடியே ரக்கில் ஏற்றுவதை 'இலங்கையின் படுகொலைக்களங்கள்'எனும் இவ்வாவணம் காண்பிக்கிறது.
இப்படத்தின் ஒரு இடத்தில் ஒரு சிப்பாய் தனது சகபாடியான இன்னொரு சிப்பாயிடம் சொல்கிறான் 'படம் பிடிக்க சடலங்களுக்கு அருகில் நின்றுகொள்' என்று.
வைத்தியசாலை மீது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை தமிழ் பொதுமக்கள் தமது கைத்தொலைபேசிகளிலும் சிறியரக கமெராக்களிலும் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் இவ்வாவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தில் இலங்கை விவகாரங்களுக்கான ஐநாவின் பேச்சாளரான கோர்டன் வையிஸ் உட்பட பல ஐநா அதிகாரிகளது சாட்சியங்களும் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ 65 தடவைகள் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த வைத்தியசாலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது நிச்சயமாக போர்க்குற்றம் தான் என்றும் அவர் சொல்கிறார்.
வாணி குமார் என்ற பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ தொழில் நுட்பவியலாளர் தன்னுடைய உறவினர்களைப் பார்ப்பதற்காகச் சென்றவர் அந்தப் போருக்குள் அகப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து சாட்சியமளித்திருக்கிறார்.
சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்திப் பிரிவுத் தலைவர் இக்காணொளிக்காட்சி ஒளிபரப்பப்படுவதனை நியாயப்படுத்துகிறார். ஆனால் இதனைப் பார்hபது குறித்து பார்வையாளர்களை அவர் எச்சரிக்கிறார். இந்நிகழ்ச்சியை பாருங்கள் என்று எவரையும் நான் வேண்டிக் கொள்ளப் போவதில்லை. இது மிகவும் பயங்கரமானது. இக்காட்சிகள் உங்கள் மனதில் ஆழப்பதிந்து விடும். சிலவேளைகளில் அது பலவருடங்களுக்கு உங்களது மனதில் பதிந்திருக்கும் என்கிறார் செய்தி மற்றும் கலாசாரப் பிரிவுக்குப் பொறுப்பான டொரத்தி பிரைன்.
கடந்த வாரம் இத்திரைப்படம் ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் திரையிடப்பட்டது. அதன் போது ஐநாவுக்கான அமெரிக்க பிரித்தானிய இந்திய பிரதிநிதிகள் உட்படப் பலர் இதனைப் பார்வையிட்டார்கள். முன்னதாக ஐநா இலங்கையில் உண்மையை நிலைநாட்டவும், கடப்பாடு மற்றும் நீதி என்பவற்றை நிலைநிறுத்தவும் சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என கன்சவேர்டிவ் பாராளுமன்ற உறுப்பினரான லீ ஸ்கொற் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இது செவ்வாய் மலை திரையிடப்படும் இப்படத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் பார்வையிட உந்தித்தள்ளி இருக்கிறது.
இத்திரைப்படத்தைப் பார்க்கும் சிறுவர்கள் பாதிக்கப்படாதிருப்பதற்காக பயங்கரமான காட்சிகள் தெளிவான தன்மையில் இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும் என்று பிரைன் வலியுறுத்தியுள்ளார். தவிரவும் பயங்கரமான விடயங்களைப் பார்க்க இயலாதவர்களும் இதனைப்பார்க்காது தவிர்ப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 'நான் நிச்சயமாகச் சொல்வேன் கர்ப்பிணிப்பெண்கள் இதனைப் பார்ப்பதனைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்' என்றும் அவர் சொல்கிறார்.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த போது சனல் 4 நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வையாளர்களை எச்சரித்தார். இத்திரைப்படம் மிக மோசமான படுகொலைகள், படுகாயங்கள், மரண தண்டனைகள், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் படுகொலைக்கான ஆதாரங்கள் போன்றவற்றைக்காட்டுகிறது. இவற்றில் பெரும்பாலானவை கைத்தொலைபேசிகளிலும் சிறிய ரக கமெராவிலும் பிடிக்கப்பட்டவை.
கடந்த இரவு இன்டிபென்டன்ட் உடன் பேசும் போது அவர் தான் அறி;க்கையிடுவதை விட இத்திரைப்படம் எவ்வளவோ மடங்கு முக்கியத்துவம் மிக்கது என்று அவர் தெரிவித்திருந்தார். 'நான் உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பில் முன்னரும் அறிக்கையிட்டு வந்திருக்கிறேன். 1980களில் மத்திய அமெரிக்காவில் இ;டம் பெற்ற யுத்தங்கள் பலவற்றை நான் அறிக்கையிட்டிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படுகொலை ஆதாரங்களைக் கொண்ட சிவில் யுத்தத்தை நான் காணவில்லை. அதுவும் அரசாங்கப் படையினராலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் புதிய ஆதாரங்களை ஒளிபரப்புவதென்பது இந்தப் படுகொலைகள் எவற்றையும் எவரும் மூடி மறைத்து விட முடியாது என்பதை உறுதிப்படுத்துவது போன்றதாகும் என சர்வதேச மனித உரிமைச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஸபாரி குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசாங்கம் இந்தப் போரை எந்தச் சுயாதீனமான சாட்சியங்களும் இன்றி நடாத்தி முடிக்கவே விரும்பியது என்றும் அவர் சொல்கிறார்.
இத்திரைப்படம் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படுகொலைகள் குறித்த காட்சிகளையும் கொண்டுள்ளது.
2009இல் போர் முடிவடைந்த கையோடு சனல் 4 இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் குறித்த காட்சிகளை ஒளிபரப்பியிருந்தது எனினும் இலங்கை அரசாங்கம் அவை புனையப்பட்டவை என்று கூறி அக்குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடிய பாராளுமன்றில் தமிழிலும் கன்னியுரை ஆற்றினார் ராதிகா.(காணொளி இணைப்பு)

கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சினைத் தமிழிலும் நிகழ்த்தினார்.
முதல்முறையாக கனேடிய பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ராதிகா சிற்சபைஈசன் தனது முதலாவது பாராளுமன்ற கன்னி உரையை தமிழ் மொழியிலும் நிகழ்த்தியுள்ளார்.
அவர் தனது உரையில், “அடுத்து கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்.
கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம். இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.
கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்.” என்று உரையாற்றினார்.
எனினும் ஈழத் தமிழர்கள் குறித்தும் ஐநா அறிக்கை குறித்தும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்தது கவலைக்குரியதே. ஆயினும் கன்னி உரை என்பதால் அவர் அதனை தவிர்த்தாரோ என்னவோ தெரியவில்லை. அடுத்தடுத்த உரைகளில் ஈழத்தமிழர்கள் சார்பிலும் குரல்கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

10 ஜூன் 2011

தடுப்புக் காவலில் உள்ள போராளிகளின் தொகையை குறைத்துக் கூறியது அரசு,ஆட்சேபித்தார் அனுரகுமார.

பூஸா, கொழும்பு, வவுனியா தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 839 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களில் இருவருக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்ககையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.
அரசாங்கம் தெரிவித்த எண்ணிக்கையை ஆட்சேபித்த அநுரகுமார திசாநாயக்க எம்.பி. அமைச்சர்கள் 11,000, 12,000, 15,000 என பல்வேறு எண்ணிக்கையில் எல்.ரி.ரி.ஈ.யினர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். ஆனால் இன்று அரசாங்கத் தரப்பு பிரதம கொறடா 839 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். பூஸா, வவுனியா, கொழும்பு ஆகிய 3 தடுப்பு முகாம்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை வெலிகந்தை, திருகோணமலை ஆகிய இடங்களிலும் தடுப்புமுகாம்கள் உள்ளன" என்றார்.
அப்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன பேசுகையில், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே தான் பதிலளித்தாக தெரிவித்தார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ.யினருக்கு எதிரான நீதிவிசாரணைகள் சிங்கள மொழியில் நடத்தப்படுவதால் அவர்கள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அநுர குமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அப்போராளிகள் சிங்கள மொழி பரிச்சயமானவர்கள் அல்லர். அத்தகைய ஒருவருடன் நான் பேசினேன். அவருக்கு நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை அறிந்திருக்கவில்லை' என அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கோத்தபாயவின் குண்டர் குழு.

யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்திருக்கும் கோத்தாபய ராஜபக்சவின் குண்டர் படையணியால் குடாநாடு அதிரத் தொடங்கியுள்ளது. தற்போது சாதாரண வேலிப் பிரச்சினைக்குக் கூட கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டல்; சம்பவங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் இனந்தெரியாத நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குடாநாட்டில் அச்சுறுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த காலங்களில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் அல்லது படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் பொதுமக்கள் அல்லது பொது அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டப்படுகின்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் காரைநகர்ப் பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் மாணவர்கள் சிலரை தண்டனைக்குரிய வகையில் தாக்கியதான குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளை அங்கும் கோத்தபாயாவின் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிய நபர்கள் சிலர் பாடசாலை அதிபரை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விரட்டுவதற்கு கோத்தபாயாவின் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே அண்மையில் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த சர்வதேசப் பிரதிநிதிகளிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்காக ஊர்காவற்துறைப் பகுதியில் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட வணபிதா தொடர்பான விடயத்திலும் தற்போது விடயங்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.
முன்னாள் கியூடெக் பணிப்பாளரும் தற்போது பங்குத் தந்தையாகவுமுள்ள வணபிதா ஜெயக்குமார் அடிகளார் மீது நடத்தப்பட்ட அவமதிப்புத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலும் கோத்தபாயவின் குண்டர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்காரர்களால் கைவிடப்பட்டிருந்த கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறித்த கைத்தொலைபேசி முக்கிய விடயமாகக் கருதப்பட்ட போதும் தற்போது பொலிஸ் நிலையத்தில் கைத்தொலைபேசி காணாமற் போய்விட்தாக பொலிசார் கூறுகின்றனர் இதன்மூலம் இதன் பின்னணியில் உள்ளவர்களின் பேரில் சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கோத்தபாய தனது அணியென்று தனியாக குண்டர் படையொன்றை வைத்திருக்கின்றாரா என்ற ஊகங்களும் கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளது.

மக்கள் கடவுளாக நின்று தி.மு.க.வை வீழ்த்தியுள்ளனர்.-விஜயகாந்த் அறிக்கை.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’8.6.2011 அன்று சட்ட மன்றத்தில் இலங்கையில் போர்க்குற்றம் செய்த மகிந்த ராஜபக்சேவை பற்றிய கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அதில் கலந்து கொண்டேன்.
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியும், அதை தடுக்க வாய்ப்பிருந்தும் தடுக்காமல் கடந்த கால தி.மு.க. அரசு துணை போனதைப் பற்றியும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் இடைவேளை உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றியும் சொன்னேன்.
கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்த பிறகுதான் இலங்கை ராணுவம் போரை மும்முரப்படுத்தி கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை அழித்தது. கலைஞர் இதைப் பற்றி கூறுகையில், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்.
இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லி 1972இல் உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய வழக்கை கலைஞர் திரும்பப் பெற்றதில் இருந்து, கச்சத் தீவுப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்று ஒவ்வொன்றாக தமிழகம் கலைஞர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டது என்று குறிப்பிட்டேன்.
இதற்கு பதில் சொல்ல முடியாத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நான் பேசிக் கொண்டு இருந்த பொழுதே எல்லோரும் ஒட்டு மொத்தமாக எழுந்து கூச்சல் போட்டு என்னை பேச விடாமல் தடுத்தனர்.
எனது கருத்தை தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
இதைக் கண்டு பொறுக்காத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்களாக இருந்து இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், சபையை நடத்த விடாமல் கூச்சலிட்டனர்.
இதை எதிர்த்து தே.மு. தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் குரல் எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சபாநாயகர் என்னை பேச அனுமதித்தார்.
நான் பேசியதில் விளக்கம் வேண்டுமென்றால் நான் பேசி முடித்த பிறகு சபாநாயகர் அனுமதியோடு விளக்கம் கேட்பதுதான் முறையாகும். ஆனால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை பேச விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு கூச்சல் போட்டபடி இருந்தனர்.
நான் எனது பேச்சை தொடர்ந்து பேசி சிறிது நேரத்தில் முடித்துக் கொண்டேன். ஆனால் சபாநாயகர் தங்களை பேச அனுமதிக்கவில்லை என்று பழி சுமத்திவிட்டு தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்.
உண்மையில் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை தி.மு.கவினரால் இன்று மட்டுமல்ல, என்றைக்கும் மறுக்க முடியாது. அவற்றிற்குப் பதில் சொல்ல முடியாமல் சட்டசபையிலே இருந்தால் எங்கே தங்களுடைய தலைவரான கலைஞர் கோபித்துக் கொள்வாரோ என்ற ஒரே காரணத்திற்காக எழுந்து கூச்சல் போட்டுவிட்டு வெளியேறுகிறோம் என்று சொல்லி தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.
இதற்கு தே.மு.தி.க. மீதும், சபாநாயகர் மீதும் வீண்பழி சுமத்துகின்றனர். தி.மு.கவினர் தங்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மற்றவர்களை பேச விடாமல் தடுத்தனர் என்பதை நான் சுட்டிக் காட்டினேன். அதே பாணியில் அவர்கள் இன்றும் வன்முறை போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
ஊழலுக்கும், ஒழுங்கீனத்திற்கும், வன்முறைக்கும் வித்திட்டு வளர்த்ததாலேயே தமிழ் நாட்டு மக்கள் தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இன்று தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் தங்களை வெளிநடப்பு செய்ய விடவில்லை என்றும் சொல்வது கேலிக்கும், கண்டனத்திற்கும் உரியது.
மடியில் கனமிருந்தால்தான், வழியில் பயம் என்பது தி.மு.கவினருக்கு முழுக்க, முழுக்கப் பொருந்தும். தே.மு.தி.கவினரைப் பொறுத்தவரை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபொழுது குறுக் கிட்டதே இல்லை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உண்மைகளையும், நியாயங்களையும், மக்களின் பிரச்சினைகளையும் என்னைப் பேசவிடாமல் தி.மு.க.வினர் தடுக்க முயற்சிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? நியாயங்கள் என்றும் சாவதில்லை. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் - என்பதற்கேற்ப இன்று தமிழ்நாட்டு மக்கள் தெய்வமாக வந்து தி.மு.கவினரை அடியோடு ஒழித்துக் கட்டியுள்ளனர்.
தே.மு.தி.க. ஜனநாயக மரபுகளையும், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் அரசியலில் காப்பாற்ற வேண்டும் என்கின்ற உறுதியோடு செயல்படுகிற இயக்கமாகும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கூட மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்கின்ற வகையிலேயே எங்களுடைய போராட்ட முறைகளை வகுத்து வருகின்றோம்.
அப்படியிருக்க எங்கள் மேல் தி.மு.கவினர் வீண்பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் பிரச்சினைகளை சந்திக்க முடியாத தி.மு.க., பிறர் மீது வீண்பழி போடுவதைவிட தாங்கள் நடந்து வந்த தவறான பாதையை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க கேட்டுக் கொள்ளுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

09 ஜூன் 2011

பான் கீ மூனுக்கு ஸ்ரீலங்கா ஆதரவளிப்பதால் போர்க் குற்ற விவகாரம் கிடப்பில் போடப்படுமா?

ஐ.நா.பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவுசெய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மெளனம் சாதிப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 40 நாட்களாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் மற்றும் இறுதிக் கட்டப் போர் விவகாரங்களுக்கான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய ஐ.நாவின் நடவடிக்கைகள் ஆராயப்படும் என கடந்த ஏப்பிரல் 25ஆம் திகதி பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
நிபுணர்குழு அறிக்கைக்கு அமைய போர்க்குற்றங்களை விசாரிக்க சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் எனக் கோரிய மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்பினை பான் கீ மூன் ஆதரிக்கின்றாரா எனவும் அவ்வாறாயின் அவரின் பரிந்துரைகளுக்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை பான் கீ மூன் எடுக்கப்போகிறார் எனவும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
குறிப்பாக சரணடைந்தபோது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சரணடைவு தொடர்பாக உறுதிமொழி வழங்கப்பட்டதில் பான் கீ மூனின் செயல் ஆளணியைச் சேர்ந்த விஜய் நம்பியாருக்கு உள்ள தொடர்பு குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை.

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத் வேண்டும் என்பதோடு தமிழர் அமைப்புக்கள் ஊடாக அதை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் சட்டத்தாரணிகள் குழுவினரால் சிறந்த யோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
இது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட கொடி என்றால் அதை கண்டிப்பாக பி.பி.சி குறிப்பிட்டிருக்கும். தடைசெய்யப்பட்ட கொடியை ஒருவர் தாங்கி நிற்பதை பிரித்தானியாவின் தேசிய ஊடகம் ஒளிபரப்பி இருக்காது. ஆனால் சிங்கள அரசின் கைக்கூலிகள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அமர்ந்துகொண்டு புலிகள் வேறு மக்கள் வேறு இது தமிழர்களின் கொடி அல்ல என வாதிடுகின்றார்கள்.
தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் சட்டரீதியான தடைகள் ஏதுவும் இல்லை. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழீழத் தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை என்று சில சிங்கள அரசின் கைக்கூலிகள் தொலைக்காட்சிகளில் புலம்பெயர் தமிழர்களை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்த முனைகின்றார்கள். தேசியக் கொடிக்கு தடை ஆகவே அதை பிடிக்கக்கூடாது என்பதே சிலரது வாதம். சிலரது வாதம்தானே பிறகு ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்கலாம் என்ன செய்வது அந்த சிலர்தானே சில பல பொறுப்புகள் வகிக்கின்றார்கள் ஆகவேதான் பதில் கூறுகின்றோம்.
தேசியக் கொடிக்கு தடை என்பது சிலரது வாதம் தேசியக் கொடி கொண்டு போராடினால் காரியம் நடக்காது என்பது சிலரது வாதம் ஆனால் அந்த சிலர் இரண்டு வாதங்களையுமே முன்வைக்கின்றார்கள்.
சீனாவில் மாவோவின் செங்கொடிக்காகவே இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படார்கள். செங்கொடிளை கண்டால் மறு பேச்சுக்கு இடமில்லை கொல் என்பதே அரசாங்க உத்தரவு. சிகரங்கள் போல் பிணங்கள் குவிந்த போதும் செங்கொடி மட்டும் இறங்கவே இல்லை. இறுதியாக உலகை ஆட்டிப்படைக்கும் நாடாக சீனா உயர அந்த செங்கொடியே காரணமாக அமைந்தது இது வரலாறு.

வட,கிழக்கில் யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் தொகையை கூற கால அவகாசம் கேட்கிறது அரசு.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின்போது கணவனை இழந்த தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கையைக் கூற அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வெற்றிவிழாக்களும் கொண்டாடப்பட்டு ஓய்ந்துவிட்டன. இப்படியான நிலையில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?இவர்களுக்காக அரசு மேற்கொண்டுள்ள சேம நலத்திட்டங்கள் என்ன?தற்போது வழங்கப்படும் சேம நலத்திட்ட நிவாரணங்கள் போதுமானதா? என அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் தனித்தனியாக இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரிடமே இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு அமைச்சரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஆளும்கட்சிக் கொறடாவான தினேஷ் குணவர்த்தன இந்த இரு கேள்வி களுக்கும் பதில் அளிப்பதற்குக் கால அவகாசம் தேவை எனச் சபையில் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.வழமைபோல் வாய்மூல விடைக்கான கேள்விக்கான பதிலளிக்கப்பட்டன.
கேள்வி நேரத்தின்பின் ஸ்ரீலங்கா பிரதமர் டி. எம்.ஜயரத்ன அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் முன்வைத்தார். வழமை போல் வெளி நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் இலங்கையில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த முனைவதாகக் கூறினார். அதேவேளை நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் இடையே ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட்டுள்ளது எனவும் ஸ்ரீலங்கா பிரதமர் தெரிவித்தார்.

08 ஜூன் 2011

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:
தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர்க் குற்றம்.

தமிழகத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை தொடர்பான விவாத்தில் பங்கேற்றுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசும் போது , இறுதிப் போரின் போது இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் போர்க்குற்ற விசாரணை அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத்தில் நடந்தவைகளை இன
அழிப்பு போர்க்குற்றம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன.இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2008-ல் அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக, இலங்கை அரசு வெளியிட்ட அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர். இதன்படி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் காணவில்லை என்பதை ஐநா சபை தனது போர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளைக் கொடியோடு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வருமாறு ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்காளல் வழிகாட்டப்பட்டும், அவரோடு வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகில் எங்கும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டது இல்லை. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது.
போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். நாடு, எல்லை கடந்த வந்து இனவெறி கொண்டு தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசும் அன்றைய மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபட்சே இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும். இன்று இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும்.
தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். என்பதற்கான தீர்மானத்தை புகழ்மிக்க இந்த அவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசினார்.

07 ஜூன் 2011

புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழே தெரியாதாம்,மகிந்தவின் கிண்டல்.

நேற்று முந் தினம் கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தைத் திறந்து வைத்துப் பேசிய மஹிந்த ராஜபக்�ஷ, புலம்பெயர் தமிழர்களுக்கு சவால் விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து குரல்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் கூட தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தயார் இல்லை, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக ஒரு தனித்த டொலரைக் கூட அவர்கள் நன்கொடை அளித்ததில்லை என்று அவர் அங்கு புலம்பியுள்ளார். �புலம்பெயர் தமிழர்களுக்கு கொழும்பில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் வீடுகள் உள்ளன.
அவர்களுக்கு சென்னை, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவிலும் வீடுகள் உள்ளன. அவர்கள் ஆங்கிலத்தைப் பேசி தமக்காக நிதியைச் சேகரிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூட அவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கு நிதி சேகரிப்பதில் திறமையானவர்கள்� என்றும் மஹிந்தவின் உரை நீண்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட நிதிகள் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்படாமல், தவறான தகவல்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தமிழர்களுக்கும் மற்ற சமூகங்களுக்கும் இடையில் பிரிவுகளைக் கொண்டுவரவும் உதவுகின்றன என்று கூறியுள்ள மஹிந்த, இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு இலங்கையிலுள்ள தமிழர்கள் திறமைசாலிகள் என்று கூறியுள்ளார். அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் அமைப்புகளும், சேகரிக்கும் பணம் ஈழதில் உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக இல்லை என்ற தொணியில் இவர் பேச்சு அமைந்துள்ளதோடு, புலம்பெயர் தமிழர்களையும் ஈழத்து உறவுகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் இவர் உரை அமைந்திருந்த்தும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இதெல்லாம் நடந்துகொண்டு இருக்க, சயிக்கிள் காப்பில் முந் நாள் பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் மகிந்தரைக் கட்டிப் பிடிக்க முயல, அப்படியே லாவகமாக அதனைத் தள்ளிவிட்ட படி மகிந்தர் லேசாக அங்கிருந்து விலகும் காட்சிகள் கூட வீடியோவில் பதிவாகியுள்ளது. மகிந்தரை ஒருக்கா கட்டிப் பிடிக்காமல் சிவநாதன் கிஷோர் தூங்கமாட்டார் போலும்!

வவுனியா முகாமில் பெண் போராளிகளின் துயர நிலை.(காணொளி)

எமக்கு கிடைத்த காணொளியை இங்கே இணைக்கிறோம். கைகளையும் காலையும் இழந்து தங்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வதென்ற தங்கள் சோகங்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்கள்.
நீண்டகாலம் விடுதலைப்போரில் இணைந்திருந்தவர்கள் இன்று அவர்களைச் சென்று பார்க்கவே உறவுகள் இல்லாத நிலையில் இருக்கும் இந்த 3பெண்களின் துயரத்தையும் பார்க்கின்ற யாருமே கண்ணீர்விட்டு அழுவார்கள். அத்தகைய அளவுக்கு நொந்துபோயிருக்கும் அவர்களது துயரங்கள் சில நிமிடக்காட்சியாய் பதியப்பட்டுள்ளது.
இப்பதிவினைச் செய்தவர் யாரோ தெரியவில்லை. ஆனால் விடயம் எங்களுக்காக வாழ்ந்து ஊனமடைந்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கும் போராளிகளின் துயரம்.


அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தமிழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அண்மையில் சிறீலங்காவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க தூதரக படைத்துறை அதிகாரி நீதித்துறையில் மேற்கொள்ள முயற்சித்த குழப்பங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைந்துள்ளதாக இலிநோயிஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் பிரான்சிஸ் பொயில்ட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
லெப். கேணல் லாறி ஸ்மித்தின் கருத்தின் பின்னனியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனே இயங்கியுள்ளது. சிறீலங்காவில் அழைப்பை அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் நிராகரித்துள்ளபோதும், பென்ரகனின் அனுமதியுடன் ஸ்மித் மாநாட்டில் பங்குபற்றியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக பங்குபற்றிய அவரின் கருத்துக்களும் உத்தியோகபூர்வமானவையே பென்ரகனின் கருத்தையே அவர் அங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவரின் கருத்து தனிப்பட்டது என அமெரிக்காவின் வெளியுறவுத்திணைக்களம் மறுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சரணடைவு நடவடிக்கைகளை சந்தேகிப்பதன் மூலம் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை வலுவிழக்கச் செய்ய அவர் முற்பட்டுள்ளார். இது ஒரு இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. எனவே தமிழ் மக்கள் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

06 ஜூன் 2011

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி வழக்கு.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த விளைகிறார்கள் என்றும் அவர் வாதாடியுள்ளார். மேலும் இந்த உரிமைகள் அடிப்படைச் சுதந்திரக் கொள்கைகளான பேச்சு, சங்கம், கூட்டம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன என்றும் வாதாடியுள்ளார்.
ஆனால், விக்ரரின் வாதத்துக்காக ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் உறுப்புரிமை நாடுகளோ விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சட்டச் சவால் குறித்து பொஹ்லர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்படி வழக்கானது சென்ற மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வழக்கில் புலிகள் சார்பாக வாதாடுவதற்கு கொப்பேக்கு சட்டத்தரணி அதிகாரம் லக்சம்பேர்க் நீதிமன்றால் வழங்கப்பட வேண்டும் என்பதால் அதன் விசாரணை தள்ளிப்போடப்பட்டது.
இப்போது சட்டத்தரணி அதிகாரம் கிடைத்துள்ளதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளையும் ஐ.ஒ கவுன்சிலையும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்பது நீதிமன்றினைப் பொறுத்தது என்று கொப்பே கூறியுள்ளார். இந்த வழக்கு சாதகமான முடிவைக் கொண்டுவந்தால், தமிழ் புலம்பெயர்வாளர்கள் சுதந்திரமான சமாதானமான ஜனநாயகச் செயற்பாடுகளைத் தமது நாடுகளில் சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கான போட்டியில் மீண்டும் பான் கீ மூன்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது இரண்டாவது தவணை பதவிக் காலத்திற்கு போட்டியிடுவது குறித்து இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
66 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் தவிர்ந்த வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் எதுவும் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் மீண்டும் 5 வருட காலத்திற்கு இப்பபதவிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் தற்போதைய பதவிக்காலம் இவ்வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி முடிவடையகிறது. எனினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகியன இத்தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக கையாளப்படுவதை விரும்புகின்றன.
நாளை ஆசிய நாடுகளுடனான சந்திப்பொன்றின்போது தான் மீண்டும் போட்டியிடுவதை பான் கீ மூன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் செய்தியாளர் மாநாடொன்றை அவர் நடத்தவுள்ளார்.

ஸ்ரீலங்காவை ஆட்டம் காண வைத்துள்ள போர்க் குற்ற காணொளி.

கடந்த வெள்ளிக்கிழமை (03) ஐ.நா மனித உரிமை ஆணைக்குழழுவில் காண்பிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் போர்க்குற்ற காணொளியானது சிறீலங்கா அரசுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட ஏ எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு வருமாறு:
சிறீலங்கா இராணுவச் சிப்பாய்கள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளியானது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காண்பிக்கப்பட்டது சிறீலங்கா மீது மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளி உண்மையானது என்பதை ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார். பின்னர் வார இறுதியில் பிரித்தானியாவின் சனல் போஃர் நிறுவனம் வழங்கிய அந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.
எனினும் காணொளியை பொய்யானது என மீண்டும் மீண்டும் மறுத்துவரும் சிறீலங்கா அரசு, அதனை ஒளிபரப்பிய சனல் போஃர் நிறுவனத்தையும் கண்டித்துள்ளது.
இந்த காணொளி எதிர்வரும் 14 ஆம் நாள் பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படவுள்ளது. கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இழுத்துவரப்படும் தமிழ் இளைஞர்களை சிறீலங்கா படையினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள், வைத்தியசாலைகள் மீதான சிறீலங்கா படையினரின் தாக்குதல் குறித்த சாட்சியங்கள், பெண் போராளிகளினது சடலங்களை அவமரியாதை செய்தது போன்ற தகவல்கள் அதில் அடங்கியுள்ளன.
இந்த காணொளியை ஐ.நாவின் இரு அதிகாரிகள் தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறீலங்காவில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதை இந்த காணொளி எடுத்துக்காட்டுவதாக கடந்த திங்கட்கிழமை (30) ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரையாற்றிய நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகார சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்தோப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒளிபரப்பும் நடவடிக்கையை அனைத்துலக மன்னிப்புச்சபையே மேற்கொண்டிருந்தது.
சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் என்பதையும், அது மனிதாபிமானத்திற்கு எதிரானவை என்பதையும் இதன் மூலம் தெளிவாக உணரமுடிவதாக அதன் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் சமன் சியா சபாரி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா அரசு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் எறிகணைத்தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை, 65 தடவைகள் மீண்டும் மீண்டும் எறிகணைகளை வீசியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த காணொளி மீண்டும் உணர்த்தியுள்ளதாக அதனை பார்வையிட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் டொஹனோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை சிறீலங்கா அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். ஐ.நா அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசு காத்திரமான பதிலை வழங்கவேண்டும் என நாம் மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசயம், சிறீலங்கா அரசின் விசாரணைகளை அனைத்துலக சமூகம் கண்காணிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்துள்ளன.
சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு ஒரு விசாரணைக்குழு அல்ல, சிறீலாங்கா அரசின் நீதித்துறையும் மிகவும் பலவீனமானது என அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளர்.
அவர்கள் நல்லிணக்கம் தொடர்பாகவே பேசுகின்றனர். நாம்; வடபகுதி மக்களுடன் பேசும் போது அவர்களில் ஒருவராக பேச வேண்டும். ஆனால் அது அங்கு நிகழவில்லை. விசாரணைகளே முக்கியமானது, பொதுமக்களை தாக்கிய இராணுவமே அங்கு தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருகின்றது. எனவே அங்கு எவ்வாறு நீதியை நிலைநாட்டமுடியும்.
மக்கள் எவ்வாறு சிறீலங்கா அரசின் நல்லிணக்கப்பாட்டை நம்புவார்கள். சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளதை காணொளி அம்பலப்படுத்தியுள்ளது.
மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், துன்புறத்தப்பட்டுள்ளனர், மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர், படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவை தொடர்பில் காத்திரமான பதில்கள் தேவையே தவிர, தேவையற்ற கலந்துரையாடல்கள் அல்ல என ஸ்பிலின்டர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 ஜூன் 2011

ஜெர்மன் தூதுவர் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக கோத்தபாய தெரிவிப்பு.

இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் ஜெர்மனிய தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெர்மனிய தூதுவரை உடனடியாக சந்தித்து இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்ப்பை வெளியிட வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் எதிர்காலத்தில் ஜெர்மனியர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள் என ஜெர்மனிய தூதுவர் இரண்டு பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக ஜெர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.