11 ஜூன் 2011

சனல் போர் வெளியிடப்போகும் இன அழிப்பு பயங்கரக் காணொளி.கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக பார்க்கக் கூடாதென எச்சரிக்கை.

சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது. அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்றன.
ஐநாவின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மரணதண்டனைகள் தொடர்பான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆல் 'போர்க்குற்றங்கள்;' என வரையறுக்கப்பட்ட இந்த ஆதாரங்களான காணொளிக்காட்சிகள் 2009 காலப்பகுதியில் தமிழ்ப் போராளிகளுடனான இறுதிப் போரில் பெற்ற வெற்றியின் சின்னங்களாக இலங்கைப் படையினரால் தங்களது கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தன.
இந்த ஆதாரங்கள் இதுகாலவரை ஐநா செயலாளர் பான் கீ மூனினால் உத்தரவிடப்படாதிருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டது போலத் தோன்றும் உடைகள் எதுவுமற்ற தமிழ்ப் பெண்களுடைய உடல்களை சிறிலங்காப் படையினர் சிரித்துப் பேசியபடியே ரக்கில் ஏற்றுவதை 'இலங்கையின் படுகொலைக்களங்கள்'எனும் இவ்வாவணம் காண்பிக்கிறது.
இப்படத்தின் ஒரு இடத்தில் ஒரு சிப்பாய் தனது சகபாடியான இன்னொரு சிப்பாயிடம் சொல்கிறான் 'படம் பிடிக்க சடலங்களுக்கு அருகில் நின்றுகொள்' என்று.
வைத்தியசாலை மீது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை தமிழ் பொதுமக்கள் தமது கைத்தொலைபேசிகளிலும் சிறியரக கமெராக்களிலும் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் இவ்வாவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தில் இலங்கை விவகாரங்களுக்கான ஐநாவின் பேச்சாளரான கோர்டன் வையிஸ் உட்பட பல ஐநா அதிகாரிகளது சாட்சியங்களும் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ 65 தடவைகள் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த வைத்தியசாலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது நிச்சயமாக போர்க்குற்றம் தான் என்றும் அவர் சொல்கிறார்.
வாணி குமார் என்ற பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ தொழில் நுட்பவியலாளர் தன்னுடைய உறவினர்களைப் பார்ப்பதற்காகச் சென்றவர் அந்தப் போருக்குள் அகப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து சாட்சியமளித்திருக்கிறார்.
சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்திப் பிரிவுத் தலைவர் இக்காணொளிக்காட்சி ஒளிபரப்பப்படுவதனை நியாயப்படுத்துகிறார். ஆனால் இதனைப் பார்hபது குறித்து பார்வையாளர்களை அவர் எச்சரிக்கிறார். இந்நிகழ்ச்சியை பாருங்கள் என்று எவரையும் நான் வேண்டிக் கொள்ளப் போவதில்லை. இது மிகவும் பயங்கரமானது. இக்காட்சிகள் உங்கள் மனதில் ஆழப்பதிந்து விடும். சிலவேளைகளில் அது பலவருடங்களுக்கு உங்களது மனதில் பதிந்திருக்கும் என்கிறார் செய்தி மற்றும் கலாசாரப் பிரிவுக்குப் பொறுப்பான டொரத்தி பிரைன்.
கடந்த வாரம் இத்திரைப்படம் ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் திரையிடப்பட்டது. அதன் போது ஐநாவுக்கான அமெரிக்க பிரித்தானிய இந்திய பிரதிநிதிகள் உட்படப் பலர் இதனைப் பார்வையிட்டார்கள். முன்னதாக ஐநா இலங்கையில் உண்மையை நிலைநாட்டவும், கடப்பாடு மற்றும் நீதி என்பவற்றை நிலைநிறுத்தவும் சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என கன்சவேர்டிவ் பாராளுமன்ற உறுப்பினரான லீ ஸ்கொற் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இது செவ்வாய் மலை திரையிடப்படும் இப்படத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் பார்வையிட உந்தித்தள்ளி இருக்கிறது.
இத்திரைப்படத்தைப் பார்க்கும் சிறுவர்கள் பாதிக்கப்படாதிருப்பதற்காக பயங்கரமான காட்சிகள் தெளிவான தன்மையில் இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும் என்று பிரைன் வலியுறுத்தியுள்ளார். தவிரவும் பயங்கரமான விடயங்களைப் பார்க்க இயலாதவர்களும் இதனைப்பார்க்காது தவிர்ப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 'நான் நிச்சயமாகச் சொல்வேன் கர்ப்பிணிப்பெண்கள் இதனைப் பார்ப்பதனைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்' என்றும் அவர் சொல்கிறார்.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த போது சனல் 4 நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வையாளர்களை எச்சரித்தார். இத்திரைப்படம் மிக மோசமான படுகொலைகள், படுகாயங்கள், மரண தண்டனைகள், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் படுகொலைக்கான ஆதாரங்கள் போன்றவற்றைக்காட்டுகிறது. இவற்றில் பெரும்பாலானவை கைத்தொலைபேசிகளிலும் சிறிய ரக கமெராவிலும் பிடிக்கப்பட்டவை.
கடந்த இரவு இன்டிபென்டன்ட் உடன் பேசும் போது அவர் தான் அறி;க்கையிடுவதை விட இத்திரைப்படம் எவ்வளவோ மடங்கு முக்கியத்துவம் மிக்கது என்று அவர் தெரிவித்திருந்தார். 'நான் உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பில் முன்னரும் அறிக்கையிட்டு வந்திருக்கிறேன். 1980களில் மத்திய அமெரிக்காவில் இ;டம் பெற்ற யுத்தங்கள் பலவற்றை நான் அறிக்கையிட்டிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படுகொலை ஆதாரங்களைக் கொண்ட சிவில் யுத்தத்தை நான் காணவில்லை. அதுவும் அரசாங்கப் படையினராலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் புதிய ஆதாரங்களை ஒளிபரப்புவதென்பது இந்தப் படுகொலைகள் எவற்றையும் எவரும் மூடி மறைத்து விட முடியாது என்பதை உறுதிப்படுத்துவது போன்றதாகும் என சர்வதேச மனித உரிமைச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஸபாரி குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசாங்கம் இந்தப் போரை எந்தச் சுயாதீனமான சாட்சியங்களும் இன்றி நடாத்தி முடிக்கவே விரும்பியது என்றும் அவர் சொல்கிறார்.
இத்திரைப்படம் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படுகொலைகள் குறித்த காட்சிகளையும் கொண்டுள்ளது.
2009இல் போர் முடிவடைந்த கையோடு சனல் 4 இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் குறித்த காட்சிகளை ஒளிபரப்பியிருந்தது எனினும் இலங்கை அரசாங்கம் அவை புனையப்பட்டவை என்று கூறி அக்குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக