21 ஜூன் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு பதில் அளிக்கப்போவதில்லை என்று முதலே தெரிவித்து விட்டோம்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அபிவிருத்தி தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனை சர்வதேச சமூகம் பார்வையிடக் கூடிய வகையில் பகிரங்கப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு உருவாக்கப்பட்டதாகவும், அந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட போதே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதாகவும், அதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் பதிலளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான அறிக்கைகளை தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்கான உணவு விநியோகம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் நியமனம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியான குரோதத்தை வெளிப்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக