23 ஜூன் 2011

சீமானின் கண்டனத்தால் இலங்கைப் பொருட்களை புறம்தள்ளிய வர்த்தக நிறுவனம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது.
கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிப்பது தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தையும், தமிழக மக்களின் உணர்வு களையும் அவமதிப்பதாகும்" என்று கூறி இருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து ஜாக் கண்காட்சி நிறுவனர் சையது ஜாகிர்அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், "ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் சென்னை வர்த்தக மையத்தில் 23ம் திகதிமுதல் 26ம் திகதிவரை இல்லம் உள்வடிவமைப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை நடத்த உள்ளோம்.
இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களோ அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களோ இவை எதுவுமே இடம் பெறவில்லை. இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த பொருளும், தயாரிப்பாளரின் நேர்முகமான அல்லது மறைமுகமான தொடர்பும் இல்லை.
எங்களுடைய நிறுவனத்தின் தகவல் ஏடுகளில் காணப்படும் தகவல்கள் ஏதேனும் தமிழர் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக