அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் தடைகளை ஏற்படுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இராணுவத்துடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் சம்பந்தன் கடிதம் ஊடாக தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சம்பந்தனின் இந்த முனைப்பு வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் அளவெட்டி சம்பவத்தை பூதாகாரமாக மாற்றும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் அரசியல் கூட்டங்களை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தன் கோரியிருந்ததாகவும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே அனுமதியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அளவெட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதோ அல்லது வாகனங்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாட்டின் போது அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்படதாகவும், இதனை கூட்டமைப்பின் சிலர் பெரிதுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தேவையில்லாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை அமைப்பில் இணைத்துக் கொண்ட போது சர்வதேச சமூகம் மௌனம் சாதித்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச நாடுகள் அறிவுரை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக