17 ஜூன் 2011

தம்மை மாட்டிவிட புலம்பெயர் தமிழர்கள் சனல்4வை பயன் படுத்துவதாக கோத்தபாய புலம்பல்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவுள்ள புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் சிக்கலில் மாட்டிவிடுவதற்காக சனல் 4 க்குப் பணம் கொடுத்துத் தயாரித்துள்ள வீடியோதான் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் என்று இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு அவதூறை ஏற்படுத்தப் பாடுபடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இப்போது சனல் 4 ஐ ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ள அவர், தமிழ் மக்களைக் காப்பாற்றப் போராடிய இராணுவத்தினர் ஒருபோதும் பொதுமக்களைக் கொல்லவே இல்லை என்றும் அவர் சாதிக்கிறார்.
இதற்கு உதாரணமாக புலிகளின் தளபதி சூசை மற்றும் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பங்கள் உட்பட கிட்டத்தட்ட 11,000 முன்னாள் புலிகள் இராணுவத்தின் பிடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனராம் என்கிறார் கோத்தபாய. மேலும், தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும் தாம் பாதுகாத்து தமது கட்டுப்பாட்டில் பேணி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய, சனல் 4 இல் வீடியோப் படம் போலியானது என்றும் அதைத் தான் முற்றிலும் மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக