22 ஜூன் 2011

கொலை,பாலியல் வெறியாட்டம் புரிந்த சிலர் இனம் காணப்பட்டனர்.

பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 வில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணக் காணொளியில் காணப்படும் (படுகொலைகள், பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையவர்கள்) சிறிலங்கா படையினர் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணொளியில் காணப்படும் இந்த 12 சிப்பாய்களும் சிறிலங்கா இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவினையும் 641 ஆவது விசேட படையணியையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பன்னிருவரில் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர்களை விசாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுச் செயலகம் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ள அவர், அவ்வாறு குறிப்பிட்ட சிப்பாய்களை விசாரணைக்கு உட்படுத்தும் போது பல உண்மைகள் வெளியாகி அது பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கிவிடும் என்பதனாலேயே இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் சனல்4 வீடியோவில் காணப்படும் படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட இன்னும் பல இராணுவ சிப்பாய்களின் பெயர் விபரங்கள், ஆதரத்துடன் வெளிவரும் எனவும் கூறப்படுகின்றது. படையதிகாரிகளும் அரசியல்வதிகளும் சிப்பாய்களின் மேல் பழிகளை போட்டுவிட்டு தப்புவதற்கு திட்டம் தீட்டிவருவதாகவும் குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்தார். இதனாலேயே சில கீழ் நிலை அதிகாரிகள் குறித்த விபரங்களை வெளியிட விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் இருந்து பெரும் தொகையான வீடியோக்களை கோத்தா தலைமையிலான இரகசிய குழு கைப்பாற்றி அழித்தது. ஆனால் சில வீடியோக்கள் விசேட அதிரடிப்படை, பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கும் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கூடவே சில சிவில் அதிகாரிகளிடமும் சிக்குண்ட நிலையில் கோத்தபாயவினால் முழுமையாக ஆதாரங்களை அழிக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக