26 ஜூன் 2011

இரட்டை குடியுரிமையுடைய போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியும்.

இரட்டை குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் என சட்டவிரோத படுகொலை மற்றும் கைதுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் திட்டமிட்டமுறையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளமைக்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற போதிலும், ஆதாரங்களுடன் அவை நிராகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லிபியாவில் சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தைப் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேச சமூகம் காத்திரமான வழியில் தலையீடு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவுவதாக அவர் ஓப்புக் கொண்டுள்ளார். எனினும், கைதிகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கை இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக