ஜூன் 16ம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 300 பேரை திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தனி விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதனில் 300 தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை எதிர்த்து இன்றைய தினம் சில தமிழ் வழக்கறிஞர்கள், அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் ஜூன் 31ம் திகதி மற்றுமொரு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயல்வதாக மேலும் செய்திகள் கசிந்துள்ளது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுமாயில் வேறு பொறிமுறைகளையும் அவர்கள் கையாளவுள்ளனராம்.
தற்சமயம் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் போக, போலீஸ் நிலையத்தில் சென்று கையெழுத்து இடுவோர் மற்றும் பல காலம் நிலுவையில் உள்ள அகதிகள் ஆகியோரைப் பிடித்து திருப்பி அனுப்பவும், குடிவரவு அதிகாரிகள் முற்படலாம என்ற ஊர்ஜிதமற்ற செய்திகள் தற்போது கசிந்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட ஒருவரின் சகோதரர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற இரகசிய தகவலை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் இலங்கை தூதுவராலயத்துக்குத் தெரிவித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட அந் நபர் இலங்கை சென்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார், இல்லையேல் கொல்லப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நாடுகடத்தப்படவுள்ள 300 பேரில் இந் நபரும் அடங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சகல தமிழ் அமைப்புகள் இந்த அகதிகளை திருப்பி அனுப்பும் செயலை தடுத்து நிறுத்த உடனடியாகத் தலையிடவேண்டும் ! தமது அமைப்புகளுக்கு நெருக்கமாக இருக்கும் பிரித்தானிய எம்.பிக்களை உடனடியாகத் திரட்டி, காத்திரமான நடவடிக்கையில் உடனே இறங்கவேண்டும். இங்கே சிறிது காலம் தாழ்த்தினாலும், அவர்கள் நாடுகடத்தப்பட்டுவிடுவார்கள் என்ற யதார்த்தத்தை அனைவரும் உணருதல் நல்லது.
நன்றி:அதிர்வு இணையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக