23 ஜூன் 2011

சர்வதேச பாதுகாப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் அவசியமில்லை என்கிறது பிரித்தானியா.

சகல தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் சர்வதேச பாதுகாப்பு அவசியமில்லை என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் அந்நாட்டு பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
2008ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் புலம்பெயர் கோரிக்கையாளர் ஒருவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் பாதுகாப்பு அவசியம் எனக் கருதப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் அடைக்கலம் வழங்கப்படும் என அவர் தெரிவி;த்துள்ளார். புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுவதாகவும் தெரிவித்த அவர்
புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் கண்காணிக்கவில்லை என்பதனையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கைகள் தனிப்பட்ட நபர்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட டேமியன் கிரீன், இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் நபர்கள் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்களின் அடிப்படையில் புகலிடம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக