12 ஜூன் 2011

ராஜபக்ஷ தமிழர்களை மட்டுமல்ல நேர்மையான மனிதர்களையும் கொன்றார்.

இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சவைவை தண்டிக்கக் கோரி திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் பேசும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய ஒரு கடமை வந்திருக்கிறது. அந்த கடமையைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் நம் சொந்தங்கள் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இடையில் அவர்களை ராஜபக்ச அடித்து கொன்றாலும் கொல்வார். சுட்டாலும் சுடுவார். இவ்வாறு 6 ஆண்டுகளாக நம் மக்கள் அங்கு பல்வேறு அச்சத்துக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக்ச இப்படி தமிழர்களை மட்டும் கொல்லவில்லை, நேர்மையான மனிதர்கள் அனைவரையும் கொன்றார். எனவே மனித குலத்தின் முதல் துரோகியான ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும். பதிலாக இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைக்காரன் ராஜபக்ச, டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்திரனராக பங்கேற்றார். அப்போது இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவருக்கு மரியாதை கொடுத்தார். இதை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். எனவே ராஜபக்சவோடு கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற அவர்களிடத்தில் இருந்து தமிழர்களை மீட்டாக வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று, சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, இதை எதிர்க்க முடியாமல் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். சொல்லப்போனால் ராஜபக்ச முதல் குற்றவாளி என்றால், கருணாநிதி இரண்டாவது குற்றவாளி, மன்மோகன்சிங் மூன்றாவது குற்றவாளி. ஏனெனில் அவர் துப்பாக்கியால் சுட்டவர், இவர் குண்டு போட்டு கொடுத்தவர், அவர் குண்டு வாங்கி கொடுத்தவர். எனவே இந்த மூன்று பேரையும் முதலில் விசாரிக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி திஹார் சிறையில் இருக்க வேண்டியவர். இதுமட்டுமின்றி இன்னும் கொஞ்சம் காலத்தில் திமுக, திஹார் முன்னேற்றக் கழகம் என்று ஆனாலும் ஆகும்.
இலங்கையில் 2009 மே 19-ம் தேதி யுத்தம் முடிந்து விட்டதாக அறிவித்தும்கூட, மறுநாள் 20-ம் தேதி அங்குள்ள 4 லட்சம் தமிழர்கள் 17 இடங்களில் அமைக்கப்பட்ட கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். ரூ. 1.76 லட்சம் கோடியை கொள்ளையடித்து விட்டு, அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழிக்காக கவலைப்படும் கருணாநிதி, இலங்கையில் 2009 மே 20-ம் தேதி முதல் இன்று வரையில் கம்பி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கும் நம் தமிழர்களுக்காக ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. எனவே இலங்கையில் வாழும் நம் சொந்தங்களை, ஒரு பாவமும் தெரியாத அந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற புனித போரில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக