29 ஜூன் 2011

சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம்.

சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
உரிய விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான சுயாதீன விசாரணைகளுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முழுமையான ஆதரவினை வழங்கும் என தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணைகளை நடத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டால், சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச தரத்தில் விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களை ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் என்பதனை இலங்கை அரசாங்கம் துரித கதியில் நிரூபிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசாங்கம் உரிய முனைப்புக் காட்டத் தவறினால் மாற்று வழிகள் குறித்து சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்;ட தமிழ் பெண் போராளிகளின் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆவணங்களை செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பியதன் மூலம் இலங்கைக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டதாக ஏ.எப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சகல குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக