04 ஜூன் 2011

இனக்கொலைகள் கண்டு கண்ணீர் சிந்திய ஐ.நா.உறுப்பினர்கள்.

சிறீலங்காவில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான காணொளி காட்சிகள் நேற்று(03) ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்ட போது அதனை பார்த்த அங்கிருந்த உறுப்பினர்கள் பலர் கண்ணீர்விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகின்றது.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களையும், பொதுமக்களையும் சிறீலங்கா படையினர் கோரமாக சுட்டுக்கொல்லும் காட்சிகளும், பெண்களும், வயோதிபர்களும், நோயாளிகளும் சிறீலங்கா படையினின் தாக்குதல்களில் கொல்லப்படும் காட்சிகளும் அங்கிருந்த பலரின் மனங்களை பதறவைத்துள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சன்ல் போஃர் நிறுவனம் வழங்கிய இந்த காணொளி ஆவணம் உண்மையானது என கடந்த செவ்வாய்க்கிழமை (31) ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்தோப் கெயின்ஸ் தெரிவித்திருந்த நிலையில் காணொளி நேற்று ஐ.நா மனித உரிமைகள் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டி புதைத்துவிட்டு, கண்ணைமூடிக்கொண்டு சிறீலங்கா அரசுக்கு தொடர்ந்து ஆதரவுகளை வழங்கிவரும் நாடுகளின் உறுப்பினர்களின் மனச்சாட்சிகளை உலுப்பும் நோக்கத்துடன் தான் இந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.
இதனிடையே, இந்த காணொளி தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகித்த சிறீலங்கா பிரதிநிதியிடம் சனல் போஃர் நிறுவனம் கேள்வி ஒன்றை கேட்க முற்பட்டபோது, அதனை தவிர்த்துவிட்டு அவர் தலைதெறிக்க ஒடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையான காணொளியை எதிர்வரும் 14 ஆம் நாள் சனல் போஃர் நிறுவனம் ஒளிபரப்பவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக